மோடியின் அடுத்த அறிவிப்பு இதுதான்! தவிக்கும் திருமா

புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற முடியாமல் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ” கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாக இல்லை. பிரதமர் மோடியின் மனதில் இருக்கும் ரகசியத் திட்டம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்” எனத் தவிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

“தற்போது நாட்டில் நிலவும் சூழல் என்பது நாமே வலிந்து உருவாக்கிக் கொண்ட செயற்கையான நெருக்கடி நிலையாகத்தான் பார்க்கிறோம். இவை முழுக்க கறுப்புப் பணத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரியவில்லை.

பிரதமர் மனதில் வேறு ஏதோ கணக்கு ஓடுகிறது. அவர்களுக்கு அரசியல்ரீதியாக ஏதோ மறைமுக அஜெண்டா இருக்கிறது. இப்படி ஓர் அறிவிப்பு வெளியானால், பொதுமக்கள் மத்தியில் என்ன மாதிரியான நெருக்கடி உருவாகும் என்று தெரியாமல், ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்கள் முடிவு எடுக்க மாட்டார்கள்” எனக் கொந்தளிப்போடு பேசினார் திருமாவளவன்.

தொடர்ந்து நம்மிடம், “புதிய ரூபாய் நோட்டுகள், போதுமான அளவுக்கு அச்சடிக்கப்படவில்லை. மக்கள் மத்தியில் 84 சதவீதமாக இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒரு நொடியில் செல்லாது எனப் பிரதமர் அறிவித்தார். அதை ஈடு செய்யும் அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அதிலும், பத்து சதவீதமான 10 ரூபாய், 20, 50 ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் உள்ளன.

பத்து சதவீத நோட்டுகளை 100 சதவீதமான மக்கள் எப்படிப் பயன்படுத்த முடியும்? இது சாமானிய மனிதனுக்கும் தெரியக்கூடிய உண்மை. இந்த உண்மை பிரதமருக்குத் தெரியாது என எப்படிச் சொல்ல முடியும். அவருடைய பொருளாதார ஆலோசகர்கள் இதைப் பற்றி சொல்லியிருக்க மாட்டார்களா? நாட்டில் ஒரு அமைதியற்ற சூழலை, வலிந்து திணிக்கிறார்கள்.

இதன்மூலம் சமூகப் பதற்றத்தை தேசிய அளவில் உருவாக்க நினைக்கிறார் பிரதமர் மோடி. இதை வைத்துக் கொண்டு அரசியல் நெருக்கடி நிலையை அமல்படுத்துவார்களோ என அச்சப்படத் தோன்றுகிறது.

1976-ம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த அரசியல் எமர்ஜென்சியை அறிவிக்கும் முடிவில் மோடி இருக்கிறாரோ என்ற எண்ணம் எழுகிறது. ஒருபக்கம் பாகிஸ்தான் பிரச்னை, மறுபக்கம் ஜம்மு- காஷ்மீர் பிரச்னை என ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி வலுத்துக் கொண்டிருக்கிறது. பொதுசிவில் சட்டம் உள்பட இவர்கள் கொண்டு வர நினைக்கும் பல விஷயங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தனிப்பெரும் மெஜாரிட்டியாக ஆட்சியில் அமர்ந்தும்கூட, அவர்களால் நினைத்ததை செயல்படுத்த முடியவில்லை.

எனவே, பொதுமக்கள் மத்தியில் அமைதியற்ற சூழலை உருவாக்கி, அதன்மூலம் அரசியல் எமர்ஜென்சி கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. நேற்று உச்ச நீதிமன்றமே எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. நாட்டில் ராணுவ சர்வாதிகாரி ஆட்சி நடைபெறுகிறதோ என முன்பு கேள்வி எழுப்பினோம். அதே நிலைப்பாட்டில்தான் இப்போதும் இருக்கிறோம்.

கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கும் 100 சதவீத தனியார்மயத்தைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடாகத்தான் அரசின் அறிவிப்பைப் பார்க்கிறோம். ஆன்லைன் வர்த்தகம் என்பது பொருட்களுக்காக நடப்பதில்லை. பணத்தின் மதிப்பை வைத்துத்தான் உலகம் முழுக்க நடைபெறுகிறது. அதை கரன்ஸி ஆன்லைன் டிரேடிங் என்கிறார்கள்.

இதை இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. இதைக் கொண்டு வரும் முடிவில் இருக்கிறார்கள். இப்படிச் செய்தால்தான் வங்கிகள் பலம் பெறும். தற்போது வங்கிகள் திவாலாகும் சூழலில் இருக்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய பல லட்சம் கோடிகள் வாராக்கடனில் சேர்ந்துவிட்டன. வங்கிப் பொருளாதாரத்தை வலிமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

அதற்காகத்தான் இவ்வாறு செய்கிறார்கள். சாதாரண மக்கள் கையில் இருக்கும் பணத்தை, ‘வங்கியில் போடு’ என நிர்பந்திக்கிறார்கள். அப்படிச் செய்வதுதான் திட்டத்தின் மிக முக்கியமான செயலாக இருக்கிறது. வங்கி நடவடிக்கைக்குள் அனைவரையும் கொண்டு வர விரும்புகிறார்கள்” என்றவர்,

” இந்தியாவைப் பொறுத்தவரையில் வங்கிப் பரிவர்த்தனைக்குள் ஈடுபடாத எளிய மக்கள்தான் பெருமளவில் இருக்கிறார்கள். அவர்களில் பெருவாரியான மக்களை வருமான வரி கட்டுபவர்களாக மாற்ற வேண்டும். இது வங்கியை வலிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான். அப்படிச் செய்தால்தான் கார்ப்பரேட்டுகளுக்கு இன்னும் பல சலுகைகளை அளிக்க முடியும். அப்படிச் செய்து, இவர்கள் நினைக்கும் வல்லரசைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இவர்கள் பாதையில் சிறு வணிகர்கள் இருப்பதை இடையூறாகப் பார்க்கிறார்கள்.

எல்லா தளங்களையும் இது பாதிக்கும். ரொக்கப் பணத்தை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள் 20 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்குள் பணத்தைக் கொடுத்து பணத்தை வாங்குபவர்கள்தான் அதிகம். இதற்கு யாரும் செக் கொடுத்து பரிவர்த்தனை செய்வதில்லை. பெரும்பாலான வணிகர்கள் ரொக்கப் பணத்தில்தான் வர்த்தகம் செய்கிறார்கள்.

விவசாயிகள், சிறு வணிகர்கள் என அனைவரையும் வங்கிப் பரிவர்த்தனைக்குள் கொண்டு வருகிறார்கள். கல்விக் கடன், விவசாயக் கடன் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால், கார்ப்பரேட்களுக்கு நிதி வாரி இறைக்கப்படுகிறது.

எனவே, சிதறிக் கிடக்கும் நோட்டுகளையெல்லாம் பரிவர்த்தனைக்குள் அடைக்க இருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் நினைக்கின்ற பேரரசாக மாற்ற முடியும் என நம்புகிறார்கள். இயல்பாகவே மக்கள் மத்தியில் போராட்டம் வெடித்தால், அரசியல் நெருக்கடி நிலை அமலாகும். இது ஒரு ராணுவ சர்வாதிகாரியின் மனநிலையாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இரக்கம், மனிதநேயம் என்ற பண்புகளைத் தாண்டி, எவ்வளவு வன்முறை வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற உளவியல் போக்கில் சிந்திக்கிறார்கள். அந்த மனநிலைக்கு ஆளானவர்தான் நமது பிரதமர். குஜராத்தில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட நேரத்தில், ‘ வண்டிச் சக்கரத்தில் ஒரு நாய் அடிபட்டால் எப்படியோ அப்படித்தான் இதுவும்’ என்றார். சர்வாதிகார மனநிலைக்கு அவர் ஆளாகியிருக்கிறார். மீண்டும் ஓர் இந்திராகாந்தியாக மாறுவதற்கு நினைக்கிறார்” எனக் கொந்தளித்து முடித்தார் திருமா.

-விகடன்-