சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு, 585 மில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வெளியிட்டுள்ளார்.
இதில், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் ஆட்சி என்ற பிரிவின் கீழ், 585 மில்லியன் டொலர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது 2015 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 70 மில்லியன் டொலர் குறைவாகும்.
எனினும், எந்த திட்டங்களில் இந்த நிதி செலவிடப்பட்டது என்ற விபரங்கள் இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்படவில்லை.
ஆனால் இந்த நிதியறிக்கையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி எழுதியுள்ள முன்னுரையில், “சிறிலங்கா, நைஜீரியா, பர்மா ஆகிய நாடுகளில் முக்கியமான ஜனநாயக அடைவுகளுக்கு நாம் ஆதரவு அளித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
அத்துடன், நாம் சிவில் சமூகம், பொதுமக்களின் நகர்வுகள், நம்பிக்கையான தலைவர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், மற்றும் ஏனையோருடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், ஜனநாயகம், நல்லாட்சி, பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு தீர்வு காணுதலிலும் கவனம் செலுத்துகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையின் பிற்பகுதியில், உறுதியான ஜனநாயகங்கள், அவற்றின் அண்டை நாடுகளுக்கு அல்லது அமெரிக்காவுக்கு குறைந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகளே உள்ளதால், ஜனநாயக விழுமியங்களை ஊக்குவிக்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அடைவுகளை எட்டுவதற்கு வர்த்தக உடன்பாடுகள், அர்த்தமுள்ள தடைகள், மக்களுக்கிடையிலான உறவுகள், வர்த்தகத் தொடர்புகள், மற்றும் தொழிலாளர் உரிமைகள், மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்களை அமெரிக்கா கையாள்வதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரத்துவ ஆட்சி நிலவும் நாடுகளில், அமைதியான ஜனநாயக மறுசீரமைப்புகள், ஜனநாயக நிறுவகங்கள், சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்தல், அனைவருக்குமான கண்ணியம் ஆகியவற்றுக்காகப் பாடுபடும் செயற்பாட்டாளர்கள் அமைப்புகளுக்கு நாம் ஆதரவளிக்கிறோம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.