இயக்குனரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்து ஏற்கெனவே நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அதேபோல், இந்நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ என்ற வசனம் பாடலாகவே வெளிவந்துள்ளது.
தன்னையும், தன்னுடைய நிகழ்ச்சியும் கிண்டல் செய்பவர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வப்போது கண்டனங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை ‘பேசுவதெல்லாம் உண்மை’ என்ற பெயரில் கலாய்த்துள்ளார்கள்.
இதைப் பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் கோபமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாலாஜியை கடுமையாக வசை பாடியுள்ளார். அவர் கூறும்போது, என்னுடைய நிகழ்ச்சியை நீங்கள் கிண்டல் செய்வதற்கு முன்னால் உங்களுடைய படங்களை நீங்கள் விமர்சனம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அம்மணி படம் பெரிய அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும், எனக்கென்று ஒரு தனி மரியாதையை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
சினிமாவில் பவர் இருக்கிறவங்க இந்த மாதிரி கீழ்த்தரமாகவும், கிண்டல் செய்வதையும் பார்க்கும்போது மிகுந்த வருத்தமளிக்கிறது பாலாஜி. சென்னை வெள்ளத்தின்போது விளம்பரத்துக்காகத்தான் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக காட்டிக் கொண்டார் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? இல்லையா? ஆனால் நான் அப்படி சொல்லும் ஆள் கிடையாது.
நான் மற்றவர்களை மதிக்கக்கூடியவள். உன்னைப்போன்ற ரியல் ஹீரோவை முன்னுதாரணமாக வைத்துதான் என்னுடைய அடுத்த படத்தில் ஒரு ஹீரோவாக காட்டப் போகிறேன்.
என்று அவர் கூறியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. அவருக்கு ஆதரவாக நிறைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயனும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.