சிதைந்த பெட்டிக்குள் தந்தையை தேடும் புதுமணப்பெண்! கலங்க வைக்கும் புகைப்படம்

கான்பூர் ரயில் விபத்தில் புதுமணப் பெண் ஒருவர் சிதைந்து போன ரயில் பெட்டிக்குள் தனது தந்தையை தேடி வரும் காட்சி பார்ப்போர் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையானில் பாட்னா- இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தடம்புரண்டு பெரிய விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிதைந்த பெட்டிக்குள் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிதைந்த பெட்டிக்குள் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த விபத்தில் உடன்பணித்த உறவுகளை தேடி மக்கள் கண்ணீரோடு அங்கு அலைந்து வருகின்றனர்.

இவர்களோடு புதுமணப் பெண் ஒருவர் சிதைந்த பெட்டிக்குள் தனது தந்தையை தேடி அலையும் காட்சி பார்ப்போர்களை கலங்க வைத்துள்ளது.

அவரது பெயர் ரூபி குப்தா. 20 வயதேயான அவருக்கு எதிர்வரும் 1ம் திகதி திருமணம் வைத்துள்ளனர். திருமணத்திற்காக சென்று கொண்டிருக்கும் போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ரூபிக்கு தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது உடன் பிறப்புகளுக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால், இந்த விபத்தில் அவரது தந்தை ராம் பிரசாத் குப்தாவைக் காணவில்லை.

தன் தந்தையை எப்படியும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் அவரைத் தீவிரமாக தேடி வருகிறார் ரூபி.

எனது திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது தந்தையை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று ரூபி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.