தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கழுத்தை இறுக்கி பெண்ணை கொலை செய்து அவரது உடலை மரப்பெட்டியில் அடைத்து வைத்தது தொடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் கொலை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் கீழவீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). இவர் மாத்தூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராணி(41). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கனகராஜ் கும்பகோணம் பிரம்மன் கோவில் பஜார் தெருவை சேர்ந்த அனந்தராமன் மனைவி பேபி (62) என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடனை திருப்பி வாங்க பேபி கடந்த 17-ந் தேதி கும்பகோணத்தில் இருந்து பாபநாசத்தில் உள்ள கனகராஜ் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த கனகராஜ் மனைவி ராணியிடம் பேபி பணத்தை திருப்பி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராணி, பேபியை பிடித்து கீழே தள்ளினார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் ராணி மின்சார வயரால் பேபியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது.
மரப்பெட்டியில் உடல் அடைப்பு
அதன்பிறகு ராணி, பேபியின் உடலை வீட்டில் உள்ள ஒரு பெரிய மரப்பெட்டியில் வைத்து அடைத்து அதன் மீது பழைய பிளாஸ்டிக் பொருட்களை போட்டு மூடியுள்ளார். பின்னர் அந்த பெட்டியை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினார். தொடர்ந்து ராணி தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் செட்டித்தெருவில் உள்ள மற்றொரு வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். பேபி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் ராணியின் செல் போனிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட் ஆப் என்று வந்துள்ளது.
இதனால் அவரது உறவினர்கள் ராணி வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு அவரது வீடு பூட்டி கிடந்துள்ளது. பேபியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கணவன்-மனைவி கைது
இந்தநிலையில் பேபியின் உறவினர்கள் நேற்று காலையில், கீழவீதியில் உள்ள கனகராஜ் வீட்டிற்கு மீண்டும் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த கனகராஜ் மற்றும் ராணியிடம் பேபி குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பேபியின் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பெரிய மரப்பெட்டியில் கொலை செய்யப்பட்ட பேபியின் உடல் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் சம்பவ இடத்தில் இருந்து கனகராஜிம், ராணியும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்- இன்ஸ்பெக்டர் வனஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், செந்தில், இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கொலை நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து பேபியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேபியின் மருமகன் ராஜ் (42) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கனகராஜ், ராணியை கைது செய்தனர். பேபியின் கொலைக்கு ராணியின் கணவர் கனக ராஜும் உடந்தையாக இருந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.