வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
வடமாகாணத்திலிருந்து 97ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
வடமாகாணத்தில் பொருத்து வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்தேவைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு வீடுகள் அவசரமாக இருக்கின்ற போதும் தற்போது வரையில் அத்தேவை பூரணமாக நிறைவு செய்யப்படவில்லை.
ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலில் வடக்கு மக்களின் அவசர தேவையான வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்காக 65ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டதை அறிமுகப்படுத்தினோம்.
இந்த பொருத்து வீட்டுத்திட்டத்தை அரசியல்வாதிகளே எதிர்க்கின்ற நிலையில் அத்திட்டத்தை வழங்குமாறு 97ஆயிரம் கோரிக்கைகள் அரசாங்க அதிபர்கள் ஊடாக எனக்கு கிடைத்துள்ளன.
அதனைக் கவனத்திற் கொண்ட நாம் முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தில் 22ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்தை விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டங்கள் மக்களின் அவசர கோரிக்கைகளின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவு ள்ளது.
முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த பொருத்து நவீன வீட்டுகளை அமைக்கும் திட்டத்தில் வீடொன்றுக்கான செலவீனம் 21லட்சத்திலிருந்து 5 இலட்சம் குறைக்கப்பட்டடு 16 லட்சமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
பொருத்து வீடுகளை மக்கள் விரும்புகின்றார்கள். அவர்களுக்கு வீட்டுத்தேவையென்பது அவசரமாக உள்ளது. ஆகவே அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இடமளிக்க வேண்டும்.
மாறாக அரசியல் காரணங்களுக்காக எதனையும் குழப்பக்கூடாது.எது எவ்வாறாயினும் மக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்காக எமது அரசாங்கம் வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.