ஜெயலலிதாவைச் சுற்றி என்ன நடந்தது தெரியுமா? கடிதம் எழுதிய புஷ்பா

‘அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி வார்டுக்கு முதல்வர் மாற்றப்பட்டார்’ என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. ‘நீங்கள் சிகிச்சையில் இருந்தபோது உங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பதைப் பற்றி உங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்’ என விரிவாகவே கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 59 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். “நோய்த் தொற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதால், கடந்த சில வாரங்களாக பிஸியோதெரபி சிகிச்சைகள் வேகமெடுத்து வருகின்றன.

தற்போது எழுத்துப் பயிற்சி, கை விரல்கள் இயக்கத்திற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் எப்போது வேண்டுமானாலும் கார்டன் திரும்புவார்” என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. இந்தக் கடிதத்தின் நகல், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், செயலர் வெங்கட் ரமணன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘இறைவன் அருளால் தாங்கள் உடல்நலம் பெற்றுத் தேறி வருவது கண்டு, மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் கவனத்துக்குச் சில தகவல்களைக் கொண்டு வர விரும்புகிறேன். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பது பற்றி அரசின் ஆலோசகர் மற்றும் செயலர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

தஞ்சாவூரில், ‘சின்னம்மா பேரவை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யும் வேலைகளும் நடந்தன. தஞ்சை தொகுதியில் அவரை போட்டியிட வைக்கவும் சிலர் முயற்சி செய்தனர். அவை அனைத்தையும் நான் முறியடித்தேன். இந்தத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வராமல் மறைக்கப்படலாம்.

நீங்கள் என்னைக் கண்டித்தது என்பது, ஒரு தாய் தன் மகளைக் கண்டித்தது போலத்தான். ஆனால், மாற்றார் முன்னிலையில் மகளைத் தாய் கண்டித்ததால், மகளின் சுயமரியாதை பாதிக்கப்பட்டது. அதன் விளைவாகவே சில செயல்களில் இறங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து இதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அதேநேரத்தில், தாய்க்கு ஒரு பிரச்னை நேரும்போது, மகள் அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டாள் என்பதை உணர்த்துவதற்காகத்தான், நீங்கள் சிகிச்சையில் இருந்த நேரத்தை சிலர் பயன்படுத்திக் கொண்டதை கடுமையாக எதிர்த்தேன்.

‘நான் எப்படி வளர வேண்டும்’ என்பதைச் சொல்லி, என்னை துணிச்சலாக வளர்த்தீர்களோ, அதை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக இது அமைந்தது. தங்களிடம் நான் முன்வைப்பது ஒன்றைத்தான். சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராம்கோபால் யாதவின் செயல்களை மன்னித்து, அவரை மீண்டும் முலாயம் சிங் யாதவ், கட்சிக்குள் சேர்த்துக் கொண்டார். அதைப்போல, எனக்கும் கட்சியின் கொறடா மற்றும் மகளிர் அணி பதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என விவரித்திருக்கிறார்.

“முதல்வர் கவனத்துக்கு நேரடியாக கடிதம் அனுப்பினால், கார்டனில் உள்ளவர்கள் அதை அவருடைய கவனத்துக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்பது தெரியும்.

அதனால்தான், முதல்வரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா புஷ்பா. கடந்த 60 நாட்களாக தமிழக அரசியலைச் சுற்றி நடந்த விவரங்களையும் அதில் தொகுத்து அனுப்பியிருக்கிறார். தற்போது தன்னைச் சுற்றி நடப்பவற்றை முதல்வர் நன்றாக உணர்ந்து வருகிறார்.

அதன் எதிரொலியாகவே சில விஷயங்கள் நடந்து வருகின்றன. மூன்று தொகுதி தேர்தல் பிரசாரத்தில், சசிகலாவுக்கு விருப்பமில்லாத சிலர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

இவை அனைத்தும் முதல்வர் விரும்பித்தான் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார். எனவே, முதல்வர் நல்ல மனநிலையில் இருக்கும் இந்த நேரத்தில் அவருடைய கவனத்துக்குக் கொண்டு செல்லாமல், எதையும் மறைக்க மாட்டார்கள் என்பதால்தான் ஆலோசகர்களுக்குக் கடிதம் எழுதினார். விரைவில் முதல்வர் தரப்பிலிருந்து நல்ல பதில் வரும் என நம்புகிறார்” என்கின்றனர் சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள்.

-விகடன்-