பிரான்ஸ் நாட்டில் 80 வயதான மூதாட்டி ஒருவரை கற்பழித்து கொடூரமாக கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தென்மேற்கு பிரான்ஸில் உள்ள Agen என்ற நகரில் தான் இந்த கொடூரச்செயல் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானிய நாட்டை சேர்ந்த Violet Price(80) என்ற மூதாட்டி உறவினரை பார்க்க பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த 2015-ம் ஆண்டு சென்றுள்ளார்.
இவருடைய மருமகளின் அண்ணனான Madi Mahaboudi(32) என்பவரும் இதே பகுதியில் வசித்து வந்துள்ளார்.
பெண்கள் விஷயத்தில் மோசமானவரான மேடி, ஏற்கனவே 2005-ம் ஆண்டு ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை ஆனவர்.
இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 11-ம் திகதி மோசமான போதையில் இருந்த மேடி மூதாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, மூதாட்டி மேடிக்கு தேநீர் கொடுத்து உபசரித்துள்ளார். இந்நிலையில், போதை தலைக்கு ஏறிய மேடி மூதாட்டியை கட்டி போட்டு கற்பழித்துள்ளார்.
பின்னர், மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவரது உடலை 7 துண்டுகளாக வெட்டி அருகில் இருந்த வனப்பகுதியில் வீசியுள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு மூதாட்டியின் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது ‘மேடிக்கு மூதாட்டி அளித்த தேநீர் கோப்பையில் அவரது டி.என்.ஏ இருந்ததை கண்டுபிடித்து மேடியை பொலிசார் கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில் மேடி தான் மூதாட்டியை கொலை செய்தது நிரூபனமானது.
மேலும், ஏற்கனவே ஒரு கொலையில் தண்டனை அனுபவித்த மேடிக்கு கடுமையான தண்டனை விதிக்காவிட்டால் அவர் மேலும் குற்றங்களில் ஈடுப்பட வாய்ப்புள்ளது என வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றம் செய்த மேடிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.