தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது முக்கிய பங்குவகித்த ஸ்ரீலங்கா இராணுவப் படையணிகளில் ஒன்றான 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன விசாரணைகளுக்கு முகம்கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இனங்களுக்கிடையிலான சுமூக நிலையை குழப்பி மோதல்களை தூண்டும் நோக்கில் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அவருக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரி சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கடந்த 19 ஆம் திகதி காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, வட மாகாணத்தில் அண்மைக் காலமாக பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டி, நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மீளக் கைப்பற்றும் நோக்கில் இரகசிய சதித்திட்டமொன்றை முன்னெடுத்துள்ள அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அரசியல் வாதிகள் சிலரின், சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கமல் குணரத்னவின் இந்தக் கூற்று அமைந்திருப்பதாக ஜனாதிபதிக்கு முறையிடப்பட்டுள்ளதை அடுத்தே அவரை விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவில் இராணுவம் உட்பட அரச படையினர், 1949 அரசியல் யாப்பின் 17 ஆம் இலக்க இராணுவ சட்டத்திற்கு அமையவே நிர்வகிக்கப்படுகின்றனர்.
இராணுவ சட்டம் இராணுவத்தில் கடமையில் இருக்கும் அனைவருக்கும், அதேபோன்று ஓய்வுபெற்று சென்றாலும் ஓய்வுபெற்ற நாள் முதல் ஆறு மாதகாலம் வரையிலான காலப்பகுதி வரையும் இராணுவச் சட்டமே நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் இராணுவ சட்டத்திற்கு உட்படுவதாலேயே அவருக்கு எதிரான முறைப்பாடுகளை இராணுவச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வது குறித்து ஆராய்ந்து அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் சட்ட மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இதேவேளை 2010 ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இராணுவ சட்டத்திற்கமையவே ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடியாது என்று காலியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் கூற்று தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி வவுனியாவில் வைத்து அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பதிலளித்திருந்தார்.
வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடியாவிட்டால், அதற்கான பொறுப்பையும் கமல் குணரத்ன போன்றோரே ஏற்க வேண்டும் என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். பல ஆயுதக் கும்பல்களை உருவாக்கியதும் இவர்களே என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இந்தக் கும்பல்களை பயன்படுத்தி அங்கு குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டே இவர்கள் வடக்கில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக குற்றம்சாட்டுகின்றது. இவர்கள் அனைவரும் சதி கும்பலின் பங்குதாரர்களே என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை கமல் குணரத்ன உட்பட குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு விரைவில் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்காக புதிய சட்டமூலமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இனவாதத்தை தூண்டும் நபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு இனப்பாகுபாடும் இன்றி இந்தக் கைதுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்தவார இறுதியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தொடரில் வைத்து பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தரவிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார்