யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு அப்பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(22) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய பாடசாலைகளை விட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதன் மூலம் அந்த பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக நாம் பல வேலை திட்டங்களை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். அதேவேளை யுத்தத்தின் காரணமாக இராணுவத்தினரின் கீழ் இருந்த சில பாடசாலைகள் விடுவிக்கப்பட்டிருக்கிறன. இருப்பினும் பலாலி ஆசிரியர் பயிற்சிசாலை இன்னும் விடுவிக்கப்படாதது வருத்தத்திற்குரிய விடயமே.

எனவே வெகு விரைவாக அந்த ஆசிரியப்பயிற்சிசாலை திறக்கப்பட்டு 14 கற்கை நெறிகளும் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு பகுதிகளில், பாடசாலைக்குச் செல்லும் சில மாணவர்கள் பாதணி இன்றிய நிலையில் பாடசாலை செல்வதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் இருக்கும் 97 கல்வி வலயங்களில் தீவக கல்வி வலயம் பின்தங்கிய நிலையில் கடந்த 20 வருடங்களாக இருந்து வருகிறது. இவற்றிட்கான கல்வி செயற்பாடுகள் மந்த நிலையிலேயே உள்ளது.

அக்கல்விவலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி அப்பாடசாலைகளை புனரமைத்து, அதிகளவான ஆசிரியர்களை அப்பாடசாலைகளில் வேலைக்கமர்த்தி பாடசாலையின் கல்வியை வளர்க்க வேண்டும்.

இலங்கையிலுள்ள பல பாடசாலைகளில் விளையாட்டு மைதாங்கள் இல்லை. இதனால் அவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை விருத்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளார்கள்.

அதற்கு சிறந்த உதாரணமாக சைவ மங்கையர் கழகம் மற்றும் இரத்மலானை கல்லூரி என்வை குறிப்பிடத்தக்கவையாகும். அதிகளவான மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலைகளில் விளையாட்டு மைதானம் இல்லாதது அங்குள்ள மாணவர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் கூறினார். 25 வருடமாக இந்த விடயம் தொடர்பில் சிரமத்தை எதிர்நோக்கி வரும் அவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.

அத்துடன் இலங்கையில் 30,000 இற்கும் மேற்பட்டவர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் 4000 தொடக்கம் 7000 வரையிலேயே சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்க வேண்டும்.

இதன்போது, நல்லாட்சியில் இருக்கும் சிலர் செய்கின்ற தவறால் முழு நல்லாட்சிக்குமே கலங்கம் ஏற்படுத்தப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.