நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா செல்வதற்கு அனுமதிகோரிய பசில் ராஜபக்ஷ!

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்கா செல்வதற்கு  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மூன்றுமாத கால அனுமதியை நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

திவிநெகும மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்துடன் அவரது கடவுச்சீட்டையும் முடக்கி வைத்துள்ளது.

இந்நிலையில் அவர் நீரிழிவு நோய்க்கு அமெரிக்க மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக டிசம்பர் 10ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 2 ஆம் திகதிவரை அமெரிக்கா செல்வதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

எனினும், பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டுச் செல்வதற்கு சட்டமா அதிபர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பசில் ராஜபக்ச, முதுகுவலி என்று காரணம் கூறி சிறைச்சாலை மருத்துவமனையிலும், பின்னர் தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியிலும், விளக்கமறியல் காலத்தை கழித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.