இப்படிசெய்தால் புகைப்பழக்கத்தினை விடலாம்!

புகைப்பதை நிறுத்த வழிகள்

நம் முன்னே நிற்கும் பெரும் சவால், “நான் புகைப்பதை நிறுத்தத்தான் நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்வது?” என்ற கேள்வி. சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இந்தப் பழக்கத்தைத் தொடர்கிறவர்களே அதிகம். திடமான மனவுறுதி இருந்தால், ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடலாம் என்ற உண்மையை ஆழமாக நம்புவதே புகையிலிருந்து விடுதலை அடைவதற்கான அடிப்படை நிலை.

புகையிலிருந்து விடுபட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்கிறார்கள். முதலில் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிறகு புகைக்கும் நேர இடைவெளியைக் கூட்டி, புகைக்கும் நினைப்பு வரும்போதெல்லாம் கவனத்தை வேறு திசைக்குத் திருப்பும் நடவடிக்கைகளில் இறங்கி – இப்படி என்னென்னவோ வழிகளைக் கையாண்டு விடுதலையானவர்கள்கூட உண்டு.

“எப்போதெல்லாம் புகைக்கும் எண்ணம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் என் மனைவியுடனோ, பிள்ளைகளுடனோ பேசிவிடுவேன். செல்பேசியிலாவது. அவர்கள் முகமே என் நினைப்பை மாற்றிவிடும்” என்று சொன்னார் ஒரு நோயாளி.

இப்போதெல்லாம் புகைப்பதை மறக்கச் செய்யும் மாத்திரைகள்கூட வந்துவிட்டன. மருத்துவர்களின் ஆலோசனையோடு இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இன்னும் நாள்பட்ட புகை நோயாளிகளை விடுவிக்க நிகோடின் கலந்த சூயிங்கம், பட்டைகள் போன்றவைகூட வந்துவிட்டன.

உதாரணமாக, பிளாஸ்திரி போன்ற நிகோடின் பட்டைகளை முடி இல்லாத முன்கையில்/தொடையில் ஒட்டிக்கொண்டால், மிகக் குறைந்த அளவிலான நிகோடின் தோல் வழியாக ரத்தத்துக்குச் சென்று, புகைக்கும்போது ஏற்படும் அதே உணர்வைக் கொடுக்கும். இதனால், புகைக்கும் ஏக்கம் குறையும். அதேசமயம், கையில் சிகரெட்டைத் தொடவில்லை எனும் உண்மை நாளடைவில் மனஉறுதியை உண்டாக்கி, அதுவும் வேண்டாம் என்று புகையிலிருந்து முழுவதுமாக விடுவிக்கும்.

புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுவிக்க அரசாங்கம் நிறையவே நடவடிக்கைகளை எடுக்கிறது. எனினும், வெறுமனே “புகைக்காதீர், புகை நமக்குப் பகை” என்றெல்லாம் வெற்றுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும், புகையை வெல்வதற்கு ஆக்கபூர்வமான வழிகள், சிகிச்சை முறைகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுசெல்வது பலன் அளிக்கும். புகைப்பதிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளையும் மாத்திரைகளையும் சிறு நகரங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் வரை கொண்டுசெல்வது கூடுதல் பலன் அளிக்கும்!