உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தனி அறையில் இருந்தபடி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் முடிவை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது முதல், வெற்றி பெற்றது வரை வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் அவர் மகிழ்ச்சியடைந்து, உற்சாகமாக காணப்பட்டார்.
தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், தேங்காய் உடைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பி, அரசு அலுவலக பணிகளை தொடரவேண்டி பூசணிக்காய், தேங்காய் உடைத்தும், தீபங்கள் ஏந்தியும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேல் தமிழக மக்கள் வைத்துள்ள அன்பு, பாசம், நம்பிக்கை எல்லாம் ஒன்று சேர்ந்து நடைபெற்று முடிந்த 3 தொகுதி தேர்தல்களிலும் பெரிய வெற்றியை ஜெயலலிதாவுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டம் ஒவ்வொரு குடும்பத்திலும் சேர்ந்திருக்கிறது. மக்களுக்காக உழைக்கிறவர், தன்னை அர்ப்பணிக்கிறவர் என்ற பாசமும் நம்பிக்கையும்தான் வெற்றியை கொடுத்திருக்கிறது.
தொடர்ந்து மக்களுக்காக பாடுபடக்கூடிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இறைவன் புண்ணியத்தால், மக்கள் பிரார்த்தனையால் உடல்நலம் பெற்று இந்த வெற்றியை பெற்றதற்காக இறைவனுக்கும், மக்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். அ.தி.மு.க. வரலாற்றில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் இருந்தபோது கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார்.
மக்களும் எம்.ஜி.ஆர். மீண்டு வருவார் என்று முதல்-அமைச்சர் ஆக்கினார்கள். அதேபோல் தற்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையை படித்த மக்கள் ஏற்கனவே வைத்திருந்த அன்பை விட அதிகமான அன்பை வைத்து சந்தோஷத்தோடு வாக்களித்திருக்கிறார்கள். ஜெயலலிதா ஒரு வார்த்தை சொன்னால் போதும் மக்கள் நம்பி வாக்களிக்கும் அளவுக்கு அவர் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.