வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 17 ஆம் திகதியன்று நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் இன்று (23) வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வடக்கில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வவுனியா, நெடுங்கேணி, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு போன்ற காட்டுப்பகுதிகளில் வாள் கத்தி, மற்றும் கையுறை போன்றவற்றை மறைத்து வைத்திருந்து கொள்ளையிட்டபின் காட்டு பிரதேசத்திலேயே வைத்துவிடுவார்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேற்படி கொள்ளைகள் இந்திய சினிமாப்பாணியில் மக்களை பயமுறுத்துவதற்காக செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையிலான பொலிஸ்குழுவே குறித்த சந்தேக நபர்களை கைது செய்திருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 கத்திகள், 28 பவுண் தங்க நகைகள், முகத்தை மூடி மறைத்து கட்டும் கறுப்பு துணிகள், முச்சக்கர வண்டி ஒன்று, மோட்டர் சைக்கிள் ஒன்று என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர்கள் மாங்குளம், சிலாபத்துறை, ஒட்டிசுட்டான், அடம்பன், மன்னார், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், செட்டிகுளம், வவுனியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கும்பல் செயற்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு அமைவாக மூன்று மாத கால விளக்கமறியல் அனுமதியை பொலிசார் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்களிடமிருந்த ஒரு தொகை உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.