விமானத்தில் வழங்கப்படும் உணவு உப்பு சப்பில்லாமல் இருப்பது ஏன்?

இன்றளவும் மனித கண்டுபிடிப்புகளில் உன்னதமானதாகவும், புரட்சிகரமானதாகவும் விமானங்கள் கருதப்படுகின்றன. இந்த நிலையில், தரையில் வாகனங்களில் பயணிப்பதற்கும் விமானத்தில் பயணிப்பதற்கும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு.

அடிக்கடி பயணிப்பவர்கள் உணரும் சில வேறுபாடுகளும், அதற்கான காரணங்களையும், அத்துடன் சில சுவாரஸ்யங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ள கர்மன் கற்பனை கோடுதான் விண்வெளியை தொடும் ஆரம்ப புள்ளியாக கருதப்படுகிறது.

மேலும், அந்த உயரத்தை தொட்டவர்களை சர்வதேச விமானவியல் கூட்டமைப்பு விண்வெளி வீரர்களாக கூறுகிறது.

ஆனால், ஒவ்வொரு விமானப் பயணியும் இந்த உயரத்தில் 10 சதவீதத்தை, அதாவது 10 கிமீ தூரத்தை ஒவ்வொரு பயணத்தின்போதும் தொட்டு வருகின்றனர்.

நீண்ட தூரம் விமானத்தில் பயணிக்கும்போது அதில் கொடுக்கப்படும் உணவுகளை தவிர்க்க முடியாது. ஆனால், அதன் சுவை வேறு மாதிரியும், சில நேரம் உப்பு சப்பில்லாதது போல தோன்றும்.

அதற்கு காரணம், விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது நுகர்வு திறுனும், சுவை உணரும் திறனும் குறையும். உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளை உணரும் சக்தி நாவிற்கு குறைந்துவிடும்.

அதிக உயரத்தில் பறக்கும்போது விமானத்தின் உள்பகுதியில் ஈரப்பதம் வெகுவாக குறைவதும், காற்றழுத்தம் குறைவாக இருப்பதுமே இதுபோன்ற சுவை உணர் திறன் குறைவதற்கு காரணம். இதற்காக, விமானத்தில் வழங்கப்படும் உணவுகளில் கூடுதல் உப்பு மற்றும் காரம் சேர்க்கப்படுவது வழக்கமாம்.

மேலும், கேபினில் உள்ள காற்றழுத்தம் காரணமாக உணவு பாதிக்கப்படாமல் இருக்க பேக்கேஜ் செய்து குளிரூட்டப்பட்டு, பரிமாறும்போது வெப்ப்படுத்தி கொடுக்கின்றனர்.

மேலை நாடுகளில் வழங்கப்படும் பல உணவுகளில் தக்காளி சாஸ் தடவி கொடுப்பது வழக்கம்.

விமான ஜெட் எஞ்சின்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன தெரியுமா? மண்ணெண்ணெய்தான். ஆம், மண்ணெண்ணெயுடன் சில செறிவூட்டும் திரவங்களை சேர்த்ததுதான் விமான ஜெட் எஞ்சின் எரிபொருளாக இருக்கிறது.

மேலும், விமானத்திலிருந்து வெளியேறும் புகையை குறைக்க உயிரி எரிபொருளை பயன்படுத்தும் திட்டத்தையும் விமான நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில், விமானத்தின் டேக் ஆஃப் செய்யும் சுமையில் சுமார் 45 சதவீதம் எரிபொருளாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழைய விமானங்களில் இருந்த ஜெட் எஞ்சின்களில் வெளிக் காற்று உறிஞ்சப்பட்டு அது டர்பைனில் எரிபொருளுடன் கலந்து எரிக்கப்படும்.

அப்போது அதிக அழுத்தத்தில் வெளியேறும் கழிவு புகை மூலமாக கிடைக்கும் முன்னோக்கு விசையை வைத்து விமானம் முன்னோக்கி பறக்கும்.

இப்போது வரும் டர்போஃபேன் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் இருக்கும் புரொப்பல்லர் விசிறிகள் காற்றை வேகமாக பின்னோக்கித் தள்ளி விமானத்திற்கு தேவையான 70 சதவீத முன்னோக்கு விசையை வழங்குகின்றன. மேலும், டர்பைன் எஞ்சினும் இருக்கும்.

அதிலிருந்து வெளியேறும் அதிக வெப்பக்காற்று கூடுதல் முன்னோக்கு விசையை வழங்கும். இதனால், டர்போஃபேன் உள்ள விமானங்களில் எஞ்சின் சப்தம் குறைவாக இருக்கும்.

பெரிய விமானங்களின் வால் பகுதியில் சிறிய டர்பைன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.

இவை விமானத்திற்கு முன்னோக்கு விசையை வழங்குவதற்கு பயன்படுத்தப்படாது. அதேநேரத்தில், விமானத்தை லேண்டிங் செய்யும்போது,

கேபினுக்கு தேவையான குளிர்சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை இந்த எஞ்சின் மூலமாக பெறப்படுகறது.

அதேபோன்று, சிறிய விமான நிலையங்களில் விமான எஞ்சின்களை ஸ்டார்ட் செய்வதற்கான வசதி இருக்காது.

அப்போது, இந்த எஞ்சினிலிருந்து கிடைக்கும் மின் ஆற்றல் மூலமாக முக்கிய எஞ்சின்கள் ஸ்டார்ட் செய்வார்கள். மேலும், அவசர காலங்களிலும் இந்த டர்பைன் எஞ்சின் பயன்படுத்தப்படும்.

விமானம் 11,000 மீட்டர் உயரம் அல்லது 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது 375 கிமீ தூரத்தை பார்கக முடியுமாம்.

ஆனால், பூமியின் சமச்சீறற்ற மேல்பாகம் மற்றும் உருளை காரணமாக இந்த பார்வை தூரத்தில் குறைவாகக்கூடும்.