பாலமுரளி கிருஷ்ணா மரணம்: கருணாநிதி இரங்கல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பழம்பெரும் கர்நாடக இசைமேதை, பாலமுரளி கிருஷ்ணா சில நாட்கள் உடல் நலக் குறைவாக இருந்து, நேற்று மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். தன்னுடைய மிக இளம் வயதிலேயே சிறந்த இசை வாணராகப் பெயர் பெற்று, தமிழகத்திலும், ஆந்திர மாநிலத்திலும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான கச்சேரிகளில் பங்கு பெற்று தனக்கெனத் தனிப் புகழ் நாட்டியவர்.

திரை உலகத்திலும் இசைத் துறையில் பங்கேற்று வெற்றிக் கொடி ஏற்றியிருக்கிறார். கழக ஆட்சியில் கோவையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக நான் இயற்றிய இசைப் பாடலின் சில வரிகளை அவர் பாடியது இன்னும் எனது செவிகளில் தவழ்ந்து கொண்டுள்ளது.

மத்திய அரசின் “பத்ம விபூ‌ஷன்” விருது, சென்னை மியூசிக் அகாடமியின் “சங்கீத கலாநிதி” விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ளார். அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குறிப்பாக இசை உலகத்தினருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.