ஒரு நாட்டை அபிவிருத்தி செய்யும்போது நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் சம நிலை பேணப்படவேண்டியதுடன் வளங்கள் சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது எந்தவொரு பகுதிக்கும் அநீதி ஏற்பட்டுவிடக்கூடாது.
குறிப்பாக, அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மாறாக அபிவிருத்தி செயற்றிட்டங்களானவை ஒரு பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவோ, வரையறை செய்யப்பட்டதாகவோ அமைந்து விடக்கூடாது.
அந்த வகையில் எமது நாட்டைப் பொறுத்த வரையில் கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய கொடூரமான யுத்தம் காரணமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கவனிக்கப்படாமல் இருந்தன என்பதே உண்மையாகும்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழல் காணப்பட்டமையினால் அங்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான அவகாசம் இருக்கவில்லை.
இதனால் அப்பகுதிகளை பொருளாதார ரீதியில் வலுவூட்ட முடியாமல் போனதுடன் உட்கட்டமைப்பு சார் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாமல் போனது.
தொழிற்சாலைகள் அமைக்கப்படாமையின் காரணமாகவும் யுத்தத்திற்கு முன்னர் இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டமையின் காரணமாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாகவில்லை.
இதனால் வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புக்கள் இன்றி பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
அது மட்டுமன்றி யுத்த சூழல் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதிலிருந்து விலகி நின்றனர்.
இதன் காரணமாகவும் வடக்கு, கிழக்கில் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி என்பன பாரிய அளவில் பின்தங்கியே காணப்பட்டன.
இங்கு யுத்தம் காரணமாகவே அபிவிருத்தியில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பின்தங்கியதாகக் கூறப்படும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனையும் தாண்டி வடக்கில் அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமையே 30 வருடகால யுத்தம் ஏற்படுவதற்கு காரணம் என தெரிவித்திருக்கிறார்.
அதாவது அபிவிருத்தியில் வடமாகாணத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதால் தான் பயங்கரவாதமும் யுத்தமும் தலைதூக்கின. நாட்டில் ஒன்பது மாகாணங்களிலும் சம அளவில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சுதந்திரம் பெற்றதன் பின்பு வடக்கில் எத்தனை பேர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்?தேசிய ரீதியில் அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் என்ன? எந்தவொரு அபிவிருத்தியும் வடக்கில் மேற்கொள்ளப்படவில்லை.
அபிவிருத்தியில் வடக்கு ஒதுக்கப்பட்டது. வடக்கிற்கும் கிழக்கிற்கும் அநீதி இழைக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் பயங்கரவாதம் தலைதூக்கியது. யுத்தம் மூண்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் அண்மையில் நான் வடக்கிற்கு சென்று பாடசாலை பிள்ளைகளை சந்தித்து, உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்த போது தமக்கு சிங்களம் படிப்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை எனவும் ஆகவே இந்த குறைபாட்டை கருதி சிங்கள ஆசிரியர்களை பெற்றுக்கொடுக்க வேண்டுமென என்னிடம் கூறினார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்குறைபாடு அம்மாகாணத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் ஜனாதிபதி மிகவும் உணர்வுபூர்வமான முறையில் சில விடயங்களை முன்வைத்திருக்கின்றார்.
ஜனாதிபதி கூறுவது போன்று அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதிகளிலும் சமமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
எனினும் எமது நாட்டைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி என்பது ஒரு காலத்தில் மேல் மாகாணத்திற்கே வரையறுக்கப்பட்டதாகக் காணப்பட்டது.
கொழும்பு மாவட்டம் நாட்டின் வர்த்தக தலைநகரமாக காணப்படுகின்ற நிலையில் அபிவிருத்தியின் அதிக நன்மைகள் இந்த மாவட்டத்தையே சென்றடைந்தன.
அதற்கடுத்ததாக மேல் மாகாணத்தில் காணப்படும் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெகுவான அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றன.
அந்த வகையில் ஏனைய மாகாணங்கள், மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மேல் மாகாணமும் அதிலுள்ள மாவட்டங்களும் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளன என்று கூறலாம்.
இந்த நிலைமையானது சமூகத்தின் மத்தியில் அநீதிகள் ஏற்படவும் பிரச்சினைகள் உருவாகுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது.
விசேடமாக, நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களாக கருதப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் சம அளவிலான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
இதனால் இப்பகுதிகளில் மக்களின் வருமான மட்டத்தில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதாகவும் பொருளாதார, சமூக அபிவிருத்தியில் பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி என்று பார்க்கும்போது நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் நீதியான முறையிலும் அநீதி ஏற்படாத வகையிலும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் அவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை என்பதை நாட்டின் தலைவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக வடமாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை சரியான முறையில் முன்னெடுக்காததன் காரணமாக பாரிய அளவிலான கொடூரமான யுத்தமொன்றுக்கு நாடு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த விடயம் நாட்டின் பிரதான அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக உணரப்பட்டுள்ளமை முக்கியமான விடயமாகும்.
எனவே எதிர்காலத்தில் இந்த நிலைமையை போக்கும் வகையில் அபிவிருத்திப் பணிகளை சமமான முறையில் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
குறிப்பாக, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திட்டமிடும்போதும் பொருளாதார செயற்றிட்டங்களை வகுக்கும் போதும் அனைத்து மாகாணங்களுக்கும் சமபங்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அதிலும் இதுவரை காலமும் அபிவிருத்தியில் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
குறிப்பாக தற்போதைய நிலைமையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் துரிதகதியில் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தை துரிதகதியில் அபிவிருத்தி செய்து உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்திகளை முன்னெடுத்து பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி விரைவாக பயணிக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அதுமட்டுமன்றி, அப்பகுதிகளில் புதிய முதலீடுகளை மேற்கொண்டு புதிதாக தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர், யுவதிகள் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.
இது தொடர்பில் அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்த வேண்டும். விசேடமாக, எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு–-செலவுத்திட்டத்தில் வட மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்கள் 250 தொழில் வாய்ப்புக்களை வழங்கும் பட்சத்தில் 200 வீத மூலதன விடுதொகைக்கு உரித்தாவார்கள் என யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில் வடக்கில் அதிகளவு முதலீடுகளை மேற்கொண்டு தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு வரவு–செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை ஒரு முக்கியத்துவமிக்க விடயமாகக் கருதப்படுகிறது.
ஆனால், இவ்வாறு யோசனையை மட்டும் முன்வைத்து விட்டு இருந்து விடாமல் அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில் இதுவரை காலமும் அபிவிருத்தியில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விரைந்து பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடமாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களே அதிகளவு வறுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நிலைமை குறித்தும் அரசாங்கம் ஆழமாக அக்கறை செலுத்த வேண்டும்.
கடந்த காலங்களைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் அபிவிருத்தியில் நாட்டின் எந்தவொரு மாகாணமும் ஒதுக்கப்படாமல் இருக்கும் வகையில் அரசாங்கமும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதுடன் அதற்கேற்ற வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.