யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் பொலிஸார் ஆயுதங்களுடன் புகுந்தமை தொடர்பில் விடுதி பாதுகாவலரினால் (வோடன்) பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் தன்னுடைய அனுமதி பெறாமலேயே பொலிஸார் அத்துமீறி ஆயுதங்களுடன் விடுதிக்குள் புகுந்தனர் என்றும், தன்னையும் சிங்கள மொழியால் அச்சுறுத்திவிட்டு சென்றார்கள் என்றும் விடுதி பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் சக மாணவரின் பிறந்த நாளினை கொண்டாடிக் கொண்டிருந்தவேளை விடுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த பொலிஸார் அங்குள்ளவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று எச்சரிக்கை செய்தனர்.
இன்று புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பிலேயே விடுதி பாதுகாவலர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுத்து மூலமான முறைப்பாட்டினை செய்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.