தினந்தோறும் கிரீன் டீ குடிப்பதன் மூலமாக, புற்றுநோய் மருந்தால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை எளிதாக தவிர்க்கலாம் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய சூழலில், கிரீன் டீ எனப்படும், சுத்தமான தேயிலை கொழுந்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடி பிரபலமான ஒன்றாகும். இதில், அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடன்ட் எனப்படும் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சத்து மற்றும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய புரதங்கள் நிறைந்துள்ளன.
இந்த கிரீன் டீ தினசரி அருந்துவதால், உடலுக்கு பல்வேறு பயன்கள் கிடைப்பதாக, ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், புற்றுநோயாளிகளுக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்பை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி, புற்றுநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்தில், சிஸ்பிளாட்டின் என்ற வீரியமிக்க ரசாயனம் உள்ளது. இது அதிகளவில் உட்கொள்ளப்படும்போது, புற்றுநோயாளிகளின் உடலில் சென்று, சிறுநீரகத்தில் அதிகப்படியாக சேர்ந்து, அதனை நச்சுப்படுத்துகிறது.
இதைச் சமாளிக்க, தினந்தோறும் நோயாளிகளுக்கு கிரீன் டீ கொடுப்பதால், எவ்வித பக்க விளைவும் இல்லாமல், புற்றுநோய் மருந்துகள் சிகிச்சை அளிக்கப் பயன்படுவதாக, தெரியவந்துள்ளது.
அத்துடன், கிரீன் டீ இயல்பாகவே, அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அதில் உள்ள துவர்ப்புச் சத்து மூலமாக, சிறுநீரகம், கல்லீரல் போன்றவை பலம்பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.