அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி பழம் பெருமையுடையது. தமிழ் கடவுள் முருகப்பெருமான் இங்கு தண்டாயுதபாணி கோலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ளார்.
கைலாய மலையில் சிவனிடம் நாரதர் மாங்கனியை கொண்டு வந்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது மகன்களான விநாயகருக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினார்.
ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனிதன்மை போய்விடும் என்று கருதி தனது மகன்கள் 2 பேருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஞானப்பழம் என்று அறிவித்தார்.முருகன் உடனே தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். ஆனால் விநாயகரோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றார். இதனால் கோபம் கொண்ட குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். இதனால் இத்தலம் பழம் நீ (பழனி)என அழைக்கப்படுகிறது.
பழனி செவ்வாய் ஆதிக்கம் பெற்ற தலமாகும். இதனால் செவ்வாய் கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நிவர்த்தி பெறுகிறார்கள்.
எந்த வகை நோய் வந்தாலும் 48 நாட்கள் பழனியில் தங்கி கிரிவலம் வந்து அதிகாலை மலைமேல் சென்று சுவாமியை வணங்கி பிரசாதம் சாப்பிட்டு வந்தால் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
பழனி மலை தண்டாயுதபாணி, நவபாசன சிலையை உருவாக்கியவர் போகர் ஆவார். அன்னை உமையை தியானித்து அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்கு வந்தார். அங்கு தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தார். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுதபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தார்.
அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும். இதனால்தான் பழனி கோவில் அபிஷேக பஞ்சாமிர்தத்துக்கு தனி சிறப்பு உள்ளது.
மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வு செய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர். தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவகோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் தலமாக பழனி திகழ்கிறது. இதனால் இங்கு தினமும் திருவிழாக் கோலம்தான். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா மிக முக்கியமானதாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் பல்வேறு வகை காவடிகள் எடுத்து பாத யாத்திரையாக வந்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். தண்டாயுதபாணி மேற்கு நோக்கி இருப்பதால் கேரள பக்தர்கள் மிக அதிகளவில் வருகின்றனர். இதனால் இக்கோவில் வருமானத்தில் முதலிடம் பெற்று திகழ்கிறது.