புலிகளை அழித்த கட்டளைத் தளபதி கைவிலங்குடன்

சிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான சிறப்பு அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர நேற்று கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறப்பு அதிரடிப்படையின் வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

இவரை செம்பர் 7ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டதையடுத்தே, கைவிலங்கு இடப்பட்ட நிலையில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போர் உச்சக்கட்டத்தில் இருந்த, 2008 மார்ச் 24ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட, கே.எம்.எல்.சரத்சந்திர, 2011 மார்ச் 19ஆம் நாள் வரை அந்தப் பதவியில் இருந்தார்.

கிழக்கில் விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற்பாடுகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குப் பின்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாகப் பங்கெடுத்த முக்கிய தளபதி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல்முறையாகும்.