தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகின்றார். முதலமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் அப்பல்லோ சென்று விசாரித்து வந்தனர்.
அதேபோல் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் அமித் ஷா, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் அப்பல்லோ வந்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றனர். இதனையடுத்து, பிரதமர் மோடி முதலமைச்சரை நேரில் விசாரிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அதிமுக எம்.பி-க்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்.பி-க்கள் பிரதமரை சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர் உடல் நலம் பெற்று வருதாக அதிமுக எம்பிக்கள் தெரிவித்தனர்.
அதிமுக எம்.பி-க்கள் நவநீத கிருஷ்ணன், மைத்ரேயன் ஆகியோரிடம் முதல்வர் குறித்து பிரதமர் நலம் விசாரித்ததாக தெரிகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் கொண்டவர் என்று பிரதமர் மோடி கூறியதாக அதிமுக எம்.பி-க்கள் தெரிவித்தனர்.