மண்டைதீவு பகுதியிலுள்ள நன்னீர் குளங்கள் இன்னமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்ற வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் கடலால் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு நன்னீருக்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. ஆனால் மண்டதீவு பிரதேசத்தில் நல்ல நீர் உள்ள குளங்கள் கடற்படையினர் வசமுள்ளது. அத்துடன் பல குளங்கள் புனரமைப்பு இன்றிய நிலையில் மூடப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க வட்டக்கச்சியில் உள்ள மாயவனூர் பிரதேசத்தில் புணரமைக்கப்பட்ட குளமொன்று தற்போது மீண்டும் கவனிப்பாரற்ற நிலையிலுள்ளது. இதனால் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளது.
மேலும் சிறிய குளங்கள் பல மூடப்பட்ட நிலையிலுள்ளது.
திட்டங்கள் வகுக்கப்பட்டு வழங்கள் சேமிக்கப்பட வேண்டியதாயுள்ளதுடன், புனரமைக்கப்பட்ட குளங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
கிளிநொச்சி நல்ல நீர்வளமிக்க இடம். அங்கு உள்ள குளங்களை புனரமைப்பதன் மூலமும், புதிய குளங்களை அமைப்பதன் மூலமும் நீர் விரயமாகமல் தடுத்து மழையில்லாத காலங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரணைமடுவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் தரைக்கு கீழ் சீமெந்தினால் தொட்டில் கட்டப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் 300 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டது. அப்போதிருந்தவர்களே இவ்வாறான புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளபோது நாம் இன்னும் அதிகபடியான வளர்ச்சி பெற்ற திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
இரணைமடுவில் குளமானது புனர்நிர்மாணம் செய்யப்படுமானால் 41 ஏக்கர் வரையிலான பிரதேசத்திற்கு நீரை வழங்க முடியும். ஆனால் புனரமைக்கப்படாத நிலையில் 20 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மாத்திரமே நீர் செலுத்தப்படுகிறது.
கணகராயன் நீர்ப்படுக்கையில் இருந்து நீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. இதே போன்று மண்டகல்லாறு பகுதிகளில் 65 வீதமான நீர் கடலில் சேர்கிறது. இதிலிருந்தே வளங்கள் அதிகளவில் இருக்கின்ற போதிலும் கூட நமக்கு அதனை சரியான முறையில் பயன்படுத்தை தெரிவதில்லை.
பூநகரியில் நீருக்கு அதிகளவில் தட்டுப்பாடு காணப்படுகின்றது. பூநகரியில் குளங்கள் அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிக்கப்படுமானால் விவசாய பிரச்சினை மட்டுமல்லாது குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக அமையும்.
இதனடிப்படையில் குளபுனரமைப்பு மற்றும் புதிய குளம் உருவாக்கம் தொடர்பான அகலமான சிந்தனைகளை நாம் கொண்டுவர வேண்டும்.
மேலும் மலையக மக்களின் காணி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நிலையான காணி வழங்கப்படல் வேண்டும். அவர்கள் லயன் வாழ்க்கையிலிருந்து மீட்கப்பட்டு கொளரவமான வாழ்க்கையை தங்களது சொந்தமான நிலங்களில் ஆரம்பிக்க வேண்டும்.
மேலும் மலையகங்களில் வாழும் மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே முன்னெடுத்து வருகிறார்கள். அவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பெரிய கஷ்டத்தினை எதிர்கொள்கிறார்கள்.
எனவே இவ்வாறான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என வலியுருத்தினார்.
மேலும், காணிகள் பிரிக்கப்பட்ட போதிலும் கூட தண்ணீருக்கான பங்குகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே நீருக்கான பங்குகள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.