புனர்வாழ்வளிக்கப்பட்ட 35 பட்டதாரிகளுக்கு நியமனம்

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானோரில் பட்டதாரிகளாக வெளியேறியுள்ள 35 பட்டதாரிகளுக்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கவேண்டும் எனக் கோரிய பிரேரணை, வடமாகாண சபையில் ஏகமனதாக, இன்று (24) நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இப்பிரேரணையைக் கொண்டு வந்தார். இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 35 பேர், பட்டதாரிகளாகத் தற்போது வெளியேறியுள்ளனர்.

இவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தகுதியான போதும் ஒருசில காரணங்களால் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாதிருந்தனர். தற்போது புனர்வாழ்வின் பின்னர் மேற்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் 11 பேர், கிளிநொச்சி 12 பேர், முல்லைத்தீவு 7 பேர், வவுனியா 4 பேர், மன்னார் ஒருவர் என வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் 35 பேர் பட்டதாரிகளாகவுள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கவேண்டும் என, வடமாகாண சுகாதார அமைச்சர்  தெரிவித்தார்.