தன்னை ஏராளமானோர் காயப்படுத்துவதால் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக நடிகையும், இயக்கனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருந்தாலும், சொல்வதெல்லாம் உண்மை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய ‘ என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வசனம் பட்டி தொட்டியெல்லாம் புகழடைந்தது. இது தமிழ் சினிமாவில் எதிரொலித்தது. வசனமாக, பாடலாக பல படங்களில் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.போதாக்குறைக்கு, விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில், அந்த வசனத்தை அநியாயத்திற்கு கிண்டல் அடித்தனர்.
தொடக்கததில் அமைதியாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் வெகுண்டு எழுந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த நிகழ்ச்சியை நடத்திய விஜய் டீவி மீது கோபத்தை கொட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
ஆனாலும் யாரும் கேட்கவில்லை. தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் அந்த வசனம் தொடர்ந்து கிண்டலடிக்கப்பட்டு வந்தது.
சமீபத்தில் வெளியான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டலடிப்பது மாதிரி ‘ பேசுவதெல்லாம் உண்மை’ என்ற தலைப்பில் ஒரு முழு நீள காட்சி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் கோபமடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், இப்படத்தின் கதாநாயகன் ஜீ.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரை டிவிட்டரில் திட்டினார். இதற்கு ஜீ.வி.பிரகாஷ் மட்டும் அவருக்கு பதில் அளித்தார். ஆனால் ஆர்.ஜே. பாலாஜி எந்த பதிலும் கூறவில்லை
இப்படி பேசாமல் இருப்பது கோழைத்தனம் என்கிற ரேஞ்சில் பேச ஆரம்பித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்நிலையில், டிவிட்டரில் சிலர் ஆர்.ஜே.பாலாஜிற்கு ஆதரவாக களம் இறங்கினர். நீங்கள் எப்படி பாலாஜியை திட்டலாம். டிவிட் செய்வதற்கு முன் யோசித்து பேசுங்கள்… என்று ஏகத்துக்கும் சிலர் எகிறனர். இதில் சிலர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் “அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியேறுகிறேன். என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி. மேலும், என்னை காயப்படுத்திய, அவமானப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை கிண்டலடிப்பதை தட்டிக் கேட்டால், மீண்டும் தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்ற கோபத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிகிறது.