இறந்த உறவுகளை நினைவு கூருவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் மாவீரர் தினம் எனக் கூறுவது தற்போதைய நிலையில் பொருத்தமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ளவேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள அவரது அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளி்த்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
யார் இறந்தாலும் வீரர்கள்தான். மா வீரர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் தமிழ் கலவரத்துக்குள் இறந்தவர்களை மாவீரர் என்று சொல்வதற்கும் இடமிருக்கின்றது. என்னைப்பொறுத்தவரைக்கும் இறந்தவர்களுக்காக அஞ்சலி செய்வது வேறுவிடயம். அதனை மாவீரர் என்றோ மாவீரர் தினம் என்றோ சொல்லத்தேவையில்லை.
அத்துடன் நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாறு மாவீரர் தினம் என்று சொல்லிக்கொண்டு அஞ்சலி செலுத்துவது பொருத்தமானதா என தெரியவில்லை. நாட்டில் தற்போது தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்றுபட்டு நல்லிணக்கத்துடன் வாழவேண்டியதொரு கட்டத்தில் இருக்கின்றோம்.
எமது பெற்றோர்கள் இறந்தால் நாங்கள் திவசம் வைப்போம். ஒவ்வொரு வருடமும் இதனை மேற்கொள்வோம். அதேபோல் இறைவனை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செய்யலாம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த காலப்பகுதியில் மாவீரர் என்ற பெயரை பாவித்து அஞ்சலி செய்வது பொருத்தமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ளவேண்டும் என்றார்.