நாக்பூரில் மதன் தங்கியிருந்த இடம் ரகசியமாகவே உள்ளது. சொத்து தொடர்பான பல ஆவணங்களை அவர் நாக்பூரில் மறைத்து வைத்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் 29-ம் தேதி தலை மறைவானார். மருத்துவக் கல்லூரி களில் ‘சீட்’ வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக மதன் மீது 123 பேர் புகார் கொடுத்தனர். மொத்தம் ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில் தலைமறைவான மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மோசடி புகார்கள் மற்றும் ஆட்கொணர்வு மனு போன்றவற்றால் மதனை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகள் எடுத்தனர். இந்நிலையில் திருப் பூரில், அவரது பெண் தோழி வர்ஷா என்ற வர்ஷினி என்பவ ரின் வீட்டில் ரகசிய அறை யில் பதுங்கியிருந்த மதனை கடந்த 21-ம் தேதி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மதனை 7 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து மதனை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மோசடி பணத்தில் சொத்துகள்
மதன் மீதான மோசடி புகார்கள், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்த தகவல்கள், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, தலைமறைவாக இருந்தபோது எங்கெல்லாம் சென்றார் போன்ற தகவல்களை பெறுவதற்காக போலீஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது.
மதன் தலைமறைவாக இருந்த 179 நாட்களில் கோவா, கேரளம், மணிப்பூர், உத்தராகண்ட், கர்நாடகம் உட்பட பல இடங் களுக்கு சென்றுள்ளார். தான் சென்ற அத்தனை இடங்களைப் பற்றியும் விவரமாக கூறும் மதன், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தங்கியிருந்த இடத்தைப் பற்றி மட்டும் எதுவும் தெரிவிக்க மறுக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “மதனுக்கு நாக்பூரில் பினாமி பெயரில் ஒரு வீடு இருப்ப தாக சந்தேகப்படுகிறோம். மதன் பல மாநிலங்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். ஆனால் அவற்றுக்கான ஆவணங்கள் எதுவுமே இதுவரை சிக்க வில்லை. இந்த ஆவணங்கள் அனைத்தையும் நாக்பூரில் உள்ள வீட்டில் வைத்திருக்க வாய்ப் புள்ளது. எனவே, மதனை நாக்பூர் அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு முன்னதாக வடபழனியில் உள்ள மதனின் அலுவலகம் மற்றும் சில இடங்களில் சோதனை நடத்திவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடரு வோம்” என்றனர்.