திருமணமான கதாநாயகிகளால் தான் திறமையாக நடிக்க முடியும்: ஜெனிலியா

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெனிலியா தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். இந்தியில் ‘போர்ஸ்-2’ என்ற படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றினார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார். குழந்தை பெற்ற பிறகு முன்பு போல் உங்களுக்கு சினிமாவில் வரவேற்பு இருக்குமா? என்று ஜெனிலியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“திருமணமான நடிகை, குழந்தை பெற்ற நடிகை என்றெல்லாம் ஒதுக்க கூடாது. அவர்களாலும் மற்றவர்களைப்போல் சிறப்பாக நடிக்க முடியும். என்னப்பொறுத்தவரை வயதான பிறகுதான் நடிகர்களுக்கு திறமை வருகிறது. இளமையான காலத்தில் நடித்ததை விட நன்றாக நடிக்கிறார்கள். நான் திருமணத்துக்கு முன்பு நடித்ததை விட இப்போது சிறப்பாக நடிப்பதாக உணர்கிறேன்.

காரணம் திருமணத்துக்கு பிறகு நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. திருமணம், குழந்தைகள் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் அவசியமானது. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். அந்தந்த காலத்தில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் குழந்தைகள் பெற்றுவிட்டதால் சினிமாவில் பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கவில்லை. திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை முன்பை விட அதிகமாகி இருக்கிறது.

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு நிறைய நடிகைகள் சினிமாவில் சாதித்து இருக்கிறார்கள். ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்ற பிறகும் நிறைய படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். கொங்கனா சென்னும் திருமணத்துக்கு பிறகு சாதித்தார்.”

இவ்வாறு ஜெனிலியா கூறினார்.