கழுத்து வலி…
இன்றைய இளைஞர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை.
இதற்கு காரணம் என்ன?
அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, வீட்டில் படுத்துக் கொண்டே டெலிவிஷன் பார்ப்பது, கழுத்தை கோணலாக வைத்துக் கொண்டு தூங்குவது, படுக்கையில் பல தலையணைகளை அடுக்கி அதன் மீது தலைவைத்து தூங்குவது என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இதைத்தவிர இன்றைய சாலைகளின் அவல நிலையும் கழுத்து வலிக்கு காரணமாகிறது. இருசக்கர வாகனங்களில், குண்டும் குழியுமான ரோடுகளில் செல்லும் போதும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவதாலும் கழுத்து வலி ஏற்படுகிறது. டாக்டர்கள் இதனை ‘செர்விக்கல் ஸ்பாண்டி லோஸிஸ்’ என்று கூறுகிறார்கள்.
முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே வரும் இது போன்ற கழுத்துவலி இப்போது 25 வயது இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் வருகிறது.
இந்த வலி கழுத்தில் தொடங்கி தோள்பட்டைக்கு பரவுகிறது. பின்னர் கைகளில் குடைவது போல வலி ஏற்பட்டு விரல்கள் வரை பரவுகிறது. இதனால் சிலருக்கு கைகள் மரத்துப்போவதும் உண்டு. நாள் ஆக… ஆக… கழுத்து வலியுடன் தலைச்சுற்றலும் ஏற்படும். அதிக உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கும் கழுத்துவலி ஏற்பட வாய்ப்பு உண்டு.
உடற்பயிற்சியே செய்யாமல் இருத்தல், கனமான பொருட்களை தூக்குதல், கழுத்தை அடிக்கடி முன், பின் அசைத்தல் வளைத்தல், கழுத்தில் அடிபடுதல், முன்பு அடிபட்டு அதனை கவனிக்காமல் இருத்தல், கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை, கழுத்தில் இருக்கின்ற சவ்வு பிதுங்குதல், கழுத்தில் வாத நீர் வருதல், கழுத்தில் கனதன்மை குறைகின்ற நோய் ஏற்படுதல் போன்றவையும் கழுத்து வலி ஏற்பட காரணங்களாகும்.
நோய் அறிகுறி :
கழுத்து வலி ஏற்படும் அறிகுறி மெதுவாகவே தெரிய வரும். சில சமயங்களில் திடீரென்று கடுமையான வலியை உண்டாக்கும் வலி லேசாகவும், கடுமையாகவும் இருக்கும்.
கழுத்தை அசைக்க முடியாமலும் போகும். சிலருக்கு கழுத்து வலி தோள்பட்டை வரை பரவும்.
நின்று கொண்டிருந்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிரித்தாலோ, இரவு நேரத்திலோ, கழுத்தை பின்பக்கமாக வளைத்தாலோ, நடந்தாலோ கூட வலி ஏற்படும். கைகளின் தசைகள் பலம் குறையும். கை தூக்குவதில் சிரமம் ஏற்படும். துவைத்த துணிகளை பிழிய முடியாத நிலை ஏற்படும். கைகளின் தசை இறுகிபோகும். தலைவலியும் ஏற்படும். நடக்கும் போது தள்ளாட்டமும் ஏற்படும்.
கண்டறியும் விதம் :
மருத்துவர் கழுத்தை முன்புறம், பின்புறம், பக்கவாட்டில் அசைக்கச் செய்து நோயை கண்டறிவார். பலக்குறைவு, உணர்ச்சி குறைவு இருக்கிறதா? என்று பார்ப்பார். கழுத்து பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தும் தெரிந்துக் கொள்ளலாம்.
கழுத்து வலியை குணப்படுத்த தசைகளை வலுவூட்டுகின்ற பயிற்சிகள் பல உள்ளன. இதற்கு மசாஜ் செய்வது சிறந்த சிகிச்சையாகும். நவீன மருத்துவத்தில் ஆரம்ப நிலையில் வலியைக் குறைக்க ஐஸ் சிகிச்சையும், உஷ்ணமான சிகிச்சையும் மாற்றி மாற்றி செய்வார்கள். வலி நிவாரணிகளை தற்காலிகமாக கொடுப்பார்கள். அபூர்வமாக தண்டுவடம் அழுத்தப்பட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
ஆயுர்வேதத்தில் கழுத்து பகுதி கபம் சார்ந்த பகுதியாகும். இங்கு வாதம் சேர்கின்ற போது தேய்வு வருகின்றது. சவ்வு பிதுங்குகிறது. நரம்பு மரத்து போகின்றது. வாதமும் குளிர்ச்சியானது. கபமும் குளிர்ச்சியானது.
எனவே இங்கு உஷ்ணமான சிகிச்சைகளைத் தான் நாம் செய்ய வேண்டும். இதனை கிரீவாகிரஹம் என்றும், கிரீவா குண்டனம் என்றும் அழைப்பார்கள்.
சிலருக்கு குடும்பத்திலேயே கழுத்து வலி வருவதுண்டு. புகைப்பிடிப்பவர்கள், கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், கண்டக்டர் பணியில் இருப்பவர்கள், மனச்சோகம் உள்ளவர்களுக்கும், இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக 8 வார சிகிச்சையில் 95 சதவீதம் பூரண பலன்பெறலாம். சிலர் மென்மையான காலர்கள் (கழுத்துபட்டை) அணிவது பயன்தரும்.
இது கழுத்தின் அசைவை கட்டுப்படுத்தும். கழுத்துக்கு ஓய்வு கிடைக்கும். இதனை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் தசைகளின் வலுவை இழக்கச் செய்து விடும்.
தவிர்க்கும் முறைகள் :
கழுத்து வலி இருப்பவர்கள் படுக்கையில் தலையணை வைத்து தூங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சமதளமான தரையில் பாய்விரித்து தூங்க வேண்டும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் எழுந்து நடந்து பின் வேலை செய்யலாம். குறிப்பாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது ஓய்வெடுத்து பின் வேலை செய்வது நல்லது. கம்ப்யூட்டரில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை கண்பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை நடைபயிற்சி செய்ய வேண்டும்.
அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்ல பழக வேண்டும். எப்போதும் நேராக, நிமிர்ந்து உட்காரவும், நிற்கவும், நடக்கவும் பழகி கொள்ள வேண்டும். நடத்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஒன்றை தினமும் கடைபிடியுங்கள். கழுத்து தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை அல்லது யோகாசன பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தாலும் கழுத்து வலி ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பற்றுப் போட்டால் வலி நீங்கும் :
கழுத்து வலி நீங்குவதற்கு சிற்றரத்தை பற்று, கொள்ளுப்பற்று, மூசாம்பரம் பற்று போன்ற பற்றுகளைப் போடுவார்கள். அமுக்கிராக் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்று போட்டு வந்தால் கழுத்து வலி குறையும்.
அதன்பிறகு கொட்டம் சுக்காதி எண்ணெய், பருத்தி எண்ணெய், கார்ப்பாஸாஸ்தியாதி எண்ணெய், சிஞ்சாதி எண்ணெய், பிரபஞ்சனம் எண்ணெய், விஷமுஷ்டி எண்ணெய், விஷ கர்ப்ப எண்ணெய் போன்றவற்றை தேய்த்து ஆவி பிடிக்கவோ அல்லது எண்ணெயை பஞ்சில் முக்கி பற்று போடுவார்கள். அதன் பின் கார்ப்பாஸாஸ்தியாதி எண்ணெயை மூக்கில் இரண்டு சொட்டு விடுவார்கள். பின்பு துணியில் மருந்துகளைக் கிழியாகக் கட்டி ஒத்தடம் கொடுப்பார்கள்.
பஸ்சில் அமர்ந்து கொண்டே தூங்க கூடாது :
பஸ்களில் பயணம் செய்யும் போது பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பயணங்களின் போது உட்கார்ந்து கொண்டே தூங்க கூடாது. முடியாத போது அல்லது அவசியம் ஏற்படும் போது மட்டும் தலையை பின்பக்கமாக சாய்த்து தூங்க வேண்டும்.
பூண்டு பால் கஷாயம் :
குப்பை மேனி இலையை சாறு பிழிந்து 200 மில்லி அளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப்பதமாகக் காய்ச்சி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வந்தால் கழுத்து வலி குறையும்.
நொச்சி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்கலாம். வாத மடக்கி இலையை கொதிக்க வைத்து உடம்புக்கு ஊற்றலாம்.
பூண்டு பால் கஷாயமும் கொடுப்பதுண்டு. தலையில் எண்ணெயைத் தேய்க்கி வைக்கின்ற சிரோ வஸ்தி போன்ற சிகிச்சைகளும் செய்தால் கழுத்து வலி குணமாகும். உள்ளுக்கு மாவிலங்கப்பட்டை கஷாயமாகிய வருணாதி கசாயம், தசமூல கஷாயம், ராஸ்னா பஞ்சகம் கஷாயம், ஆபாகுக்குலு, யோகராஜ குக்குலு, தான்வந்தர தைலம் வஸ்திபாகம் போன்றவை கொடுப்பதுண்டு.
வலி சற்றுக் குறைந்த பிறகு உடற்பயிற்சி, யோகா பயிற்சியும் செய்யலாம்.