மழலையர் காப்பகத்தில் பெண் குழந்தை அடித்து துன்புறுத்தல்

மும்பை மழலையர் காப்பகத்தில் குழந்தை ஒன்று பராமரிப்பு பெண்ணால் அடித்து தரையில் வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ருசிதா சின்கா என்ற பெண் பணியின் காரணமாக தனது 9 மாத பெண் குழந்தை ரிட்டிஷாவை அங்குள்ள ‘பூர்வா மழலையர் காப்பகத்தில் நவம்பர் 21-ம் தேதி சேர்த்திருக்கிறார்.

பணி முடிந்து குழந்தையை காப்பகத்திலிருந்து அழைத்துச் செல்கையில் குழந்தையின் உடலில் அங்கங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்ட ருசிதா இது குறித்து மழலையர் காப்பக நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார். ஆனால் காப்பக நிர்வாகம் சரியான பதிலை அவரிடம் அளிக்கவில்லை.

இது குறித்து ருசிதா கூறும்போது, “குழந்தையின் காயம் பற்றி காப்பகத்தின் இயக்குனர் பிரியங்காவிடம் கேட்டதற்கு குழந்தை தானே கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறினார். ஆனால் என் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாரோ என் குழந்தையை அடித்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. காப்பக நிர்வாகத்திடம் சம்பவந்தன்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை என்னிடம் காட்டுமாறு கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.

அதன்பின், இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் பின்னரே காப்பக நிர்வாகம் எனக்கு சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் காட்டியது. மழலையர் காப்பகத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண் ஒருவர் எனது குழந்தையை அடித்து தரையில் வீசிய காட்சி பதிவாகியிருந்தது. எனது குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மழலையர் காப்பக இயக்குனர் பிரியங்காவையும், குழந்தையை அடித்து துன்புறுத்திய அஃப்சனா ஷேக் என்ற பெண்னையும் போலீஸார் கைது செய்தனர்.

இதில் மழலையர் காப்பக இயக்குனர் பிரியாங்காவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.