அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா…!

சென்னைக்கு அருகில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதாப் ரெட்டி, “ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டவர்கள் பொதுவாகப் பேச முடியாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சிறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பேசுவது எளிதல்ல. மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசவேண்டும். சில நொடிகளோ, நிமிடங்களோ அப்படிப் பேசுகிறார்” என்று கூறியிருக்கிறார்.உடல் நலம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் காரணமாகவும் நீர்ச்சத்து குறைவின் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக மருத்துவமனை முதலில் தெரிவித்தது.

அதற்குப் பிறகு அவர் நுரையீரல் பிரச்சனைகளுக்காக சிகிச்சைபெற்றவருவதாகக் கூறப்பட்டது. அவருக்குத் தொண்டையில் குழாயைப் பொருத்தும் “ட்ராக்யோஸ்டமி” சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் பிறகு தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த தகவல்களை அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி அவ்வப்போது பகிர்ந்துவருகிறார்.எழுந்து நடக்கவேண்டியதுதான் பாக்கி’
முதலமைச்சருக்கு தற்போது இயன்முறை சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் உடற்பயிற்சிகளைச் செய்ய அவர் ஊக்குவிக்கப்பட்டுவருவதாகவும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் எழுந்து நடக்க வேண்டியதுதான் பாக்கி என்றும் அப்படி நடக்கும்போது அவர் வீடு திரும்பலாம் என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.ஜெயலலிதா அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், அது குறித்து தகவல்களை வெளியிட்ட பிரதாப் ரெட்டி, ஆரம்ப வாரங்களில் ஜெயலலிதாவுக்குத் தேவைப்பட்டது போன்ற சிகிச்சை தற்போது தேவையில்லை என அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவர்கள் கருதியதால், அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டதாகவும் அங்கு அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் பிரதாப் ரெட்டி கூறினார்.

அப்படி தனி அறைக்கு மாற்றப்படும்போது, அவரால் விரைவில் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும் என்றும் அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறதென்றும் பல பிரச்சனைகளுடன் இருந்த அவரது உடல் உறுப்புகள் தற்போது சரியாக இயங்குவதாகவும் பிரதாப் ரெட்டி கூறினார்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அப்பலோ மருத்துவமனை மருத்துவ செய்திக் குறிப்புகளை வெளியிட்டது. ஆனால், தற்போது அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, பொது நிகழ்வுகளில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது இது தொடர்பான தகவல்களைக் கூறிவருகிறார்.