அமெரிக்காவில் 2024 – ஒலிம்பிக் போட்டியை நடத்த டொனால்ட் விருப்பம்

2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை அமெரிக்காவில் நடத்த அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றது. அடுத்த (32-வது) ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பை எந்த நாட்டிடம் ஒப்படைப்பது? என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வரும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளது.

இந்நிலையில், வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள 33-வது ஒலிம்பிக் போட்டியை அமெரிக்காவில் நடத்த அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, டொனால்ட் டிரம்ப்புடன் லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயர் எரிக் கார்செட்டி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப், இருவரும் நேரில் சந்தித்து பேசும்போது இதுபற்றி விரிவாக விவாதித்து முடிவு செய்வார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 40 லட்சம் மக்கள் வசித்துவரும் உல்லாச நகரமான லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 1932 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.