பஞ்சாப் மாநிலம், பதிந்தாவில் ரூ.926 கோடி மதிப்பில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். அப்போது அவர் நாடு முழுவதும் பரபரப்பையும், இனம் புரியாத பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிற ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் குறித்து கூறியதாவது:-
நமது நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையைப் போன்று 4 மடங்கு எண்ணிக்கையிலான செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. பணம் செலுத்துவதற்கு செல்போனை பயன்படுத்துவதற்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். வங்கிகள் வழங்குகிற செயலிகளை நீங்கள் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் செல்போனில் வங்கி பண பரிவர்த்தனை தொடர்பாக பயிற்சி தர வேண்டும்.
சுரண்டல்
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது, ஏழை மக்களுக்கு அவர்களது உரிமைகளை வழங்குவதற்குத்தான்.
ஊழல், கருப்புபணம் போன்றவற்றின் காரணமாகத்தான் நடுத்தர வர்க்கத்தினர் சுரண்டப்படுகின்றனர். ஏழை எளியோர் தங்கள் உரிமைகளை இழந்துள்ளனர்.
கருப்பு பண வியாபாரம், இந்த நாட்டை கரையான் போல சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
செல்போன் வழி பண பரிவர்த்தனை
எனவேதான் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. புதிய நோட்டுகள் படிப்படியாக உங்களை வந்து சேரும்.
இந்த நடவடிக்கைகளால், பிரச்சினைகளையும், அவதி களையும் சந்தித்து வருகிற மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் நேர்மையுடன் இந்த நடவடிக்கையில் இணைந்து நிற்கிறீர்கள்.
நான் உங்கள் ஆதரவை தேடுகிறேன். உங்கள் செல்போன், வெறும் செல்போன் அல்ல. அந்த செல்போனை நீங்கள் உங்கள் வங்கியாக மாற்றிக்கொள்ள முடியும். பணப்பையாக மாற்றிக்கொள்ள இயலும். இன்று கூட உங்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இருந்தால், நீங்கள் சந்தைக்கு சென்று பொருட் களை வாங்க முடியும். செல்போன் வழியாக அதற்கான பணத்தை செலுத்த முடியும். பணத்தை தொடாமல் உங்கள் தொழிலை நீங்கள் செய்ய முடியும்.
கள்ள நோட்டுகள்
கள்ள நோட்டுகள், நமது இளைஞர்களை அழித்திருக்கிறது. நமது இளைஞர்களை காப்பதற்கு, கருப்பு பணத்துக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்தியா ஒரு மாபெரும் நாடாக ஆவதற்கு, இந்த நடவடிக்கையில் உங்களது முழுமையான ஆதரவை நான் நாடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் பற்றியும் பேச்சு
இந்த விழாவில் பாகிஸ்தான் குறித்தும் பேசிய பிரதமர் மோடி, “துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதால் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை. இந்தியாவுக்கு எதிராக சண்டை போட்டு அந்த நாடு தன்னை தானே சேதப்படுத்தி கொள்கிறது. பலம் இருந்தும் நமது வீரர்கள் தங்களது வீரத்தை காட்ட முடியாமல் இருந்து வந்தனர். ஆனால் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 250 கி.மீ. பரப்பளவில் அவர்கள் துல்லியமான தாக்குதல்கள் நடத்தியபின்னர் பாகிஸ்தான், நமது வீரர்களின் வீரத்தை பார்த்திருக்கும்” என குறிப்பிட்டார்.
“சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி, சட்லஜ், பீஸ், ரவி நதி நீர் இந்தியாவுக்கும், நமது விவசாயிகளுக்கும் உரித்தானது. இதை பாகிஸ்தானில் உள்ள வயல்களில் பயன்படுத்தக்கூடாது. இந்த நீரின் ஒவ்வொரு சொட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த தண்ணீரை பஞ்சாப், காஷ்மீர், இந்திய விவசாயிகளுக்கு தருவேன். நான் இதை செய்ய உறுதி கொண்டுள்ளேன்” எனவும் அவர் கூறினார்.