சமூக சேவையின் மூலம் மன அமைதி கிடைக்கின்றது!

நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

“ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவ வேண்டும். சமூக சேவைகளில் நிறைய பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் அந்த பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் எல்லோருமே சம்பாதிக்கிறார்கள். சிலருக்கு லட்சங்களிலும், இன்னும் சிலருக்கு கோடிகளிலும் வருமானம் வருகிறது.

சம்பாதிக்கும் தொகை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைப்பது சுயநலம். அந்த பணத்துக்கு மதிப்போ மரியாதையோ கிடையாது. அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பதில்தான் பொது நலமும் சந்தோஷமும் இருக்கிறது. சமூகத்தில் நிறைய மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை தூக்கி விட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

1 கோடி ரூபாய் சம்பாதித்தால் அனைத்தையும் தானே சாப்பிட வேண்டும் என்று சுயநலமாக சிந்திக்காமல் ஏழைகளுக்கும் கொடுத்து உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் தன்னிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு உயரும். சமூக சேவைகள் செய்யும் போது கிடைக்கும் திருப்தியே தனி. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

ஏழைகள் பசியை தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. சமூக சேவைகளில்தான் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. உதவிகள் செய்யும் போது தான் நம் மீதே நமக்கு அளவு கடந்த மரியாதை ஏற்படுகிறது. இந்த விஷயத்தை நான் தெரிந்து வைத்து இருப்பதால் தான் சமூக சேவைகளில் ஆர்வமாக ஈடுபடுகிறேன்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.