எண் 1தொடக்கம் 9 வரை பிறந்தவர்களின் முழு வாழ்க்கை ரகசியம்!

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் A,I,J,Q,Yஆகியவை.

குண அமைப்பு
1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள். வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர். முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.

தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

உடல் அமைப்பு ஆரோக்கியம்
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பலவீனம் இருக்கும். கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.

குடும்ப வாழ்க்கை
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து செய்து முடிப்பார்கள். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.

பொருளாதாரம்
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில்
ஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும். அரசு உத்தியோகமும் இவர்களுக்கு அமையும். சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.

நண்பர்கள் பகைவர்கள்
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிகார குணம் இருக்கும். இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும். 2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல நட்புகள் கிடைக்கும்.

சூரியனுக்குரிய காலம்
ஒவவொரு ஆண்டும் ஆங்கில வருட ரீதியாக ஜீலை 22 முதல் ஆகஸ்டு 22 தேதிவரை சூரியனுக்குரிய காலமாகும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குடையது.

சூரியனுக்குரிய திசை
சூரியனுடைய திசை கிழக்கு. பிரார்த்தனை செய்யும் இடம், பூஜை அறை, சமையல் அறை போன்றவை சூரியனுக்குரியவை. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கிழக்கு பக்கமாக தொடங்கினால் அற்புதமான நற்பலனை அடையலாம்.

அதிர்ஷ்ட கல்
சூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்ரரவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம் மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும். தனவரவும், நன்மதிப்பும் உண்டாகும்.

பரிகாரங்கள்
ஓன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி -1,10, 19, 28
அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட திசை – கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு
அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்
அதிர்ஷ்ட தெய்வம் – சிவன்

எண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். 2ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். இரண்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் B,K .Rஆகியவை.

குண அமைப்பு
2ம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் நீர் எப்படி நிலையில்லாமல் ஓடுகிறதோ அதுபோல சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாவே காணப்படுவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். அவசரக்காரர்கள் அல்ல. எந்த வொரு காரியத்தையும் தீர ஆலோசித்து செயல்படுவார்கள். இதனால் எவ்வளவு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் துணிந்து நின்று போராடி வெற்றியைடைவார்கள். சுயநலம் இல்லாமல் எதையும் தியாகம் செய்யத் துணிவதால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.

இவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. எப்போதும் சற்று குழப்பவாதியாகவே இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்கள் ஆதலால் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.
வேடிக்கையாக பேசக்கூடியவர்கள். பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும். பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிக கவலைப்படுபார்கள். தம்முடைய கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள்.

அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும் சற்று பயந்த சுபாவம் இவர்களுக்கு உண்டு. கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தூக்கத்திலும் சுய உணர்வு பெற்றவர்கள். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்கள், சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மிகுந்த கலாரசனை உடையவர்கள். ஆதலால் சங்கீதம், நனடம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிலும் தற்பாப்புடன் செயல்படும் இவர்கள் வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள். பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்ள வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது அவசியம்.

குடும்ப வாழ்க்கை
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கற்பனைத் திறன் உள்ளவர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்கள். குடும்பத்தை பொறுப்போடு நடத்தி செல்வார்கள். சில நேரங்களில் குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபம் கொண்டு கடினமான வார்த்தைகளை பிரயோகித்த விடுவதால் நெருக்கமானவர்களிடம் விரோதத்தையும் சம்பாதித்து விடுவார்கள். சுக சௌகரியங்களைப் பெருக்கி கொள்ளவும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழவும் நிறைய செலவு செய்வார்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய அமைதிக் குறைவுக்கு முக்கிய காரணம் 2ம் எண்ணில் பிறந்தவராகத்தான் இருக்கு முடியும். தான் என்ற அகங்காரமும், பிடிவாத குணமும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால் எல்லா நேரமும் எல்லோரிடமும் இவர்களால் ஒத்துப்போக முடியாது. வீண் பிடிவாதத்தை விடுத்து அனைவரையும் அனுசரித்து நடந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமையும்.

உடல் அமைப்பு ஆரோக்கியம்
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் என்பதால் மற்றவர்களை வசீகரப்படுத்தக் கூடிய அழகான உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தரமான உயரம், சிறிய கழுத்து, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள், அழகான கண்கள் மற்றும் புருவங்கள் அமையப் பெற்றவராக இருப்பார்கள். மெலிந்த குரலில் பேசுவார்கள். சந்திரன் நீர்காரகன் என்பதால் இவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதனால் இவர்கள் அடிக்கடி சளி, சுரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தொண்டைவலி, தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். சாதாரணமாக இவர்களுக்கு ஜீரண உறுப்புகளும், சிறுநீரகமும் கோளாறு பண்ணிவிடும். 2ம் எண்ணில் பிறந்தவர்கள் முடிந்தவரை மதுவை தொடவே கூடாது. மது பழக்கத்திற்கு ஆளானால் இவர்களை மீட்கவே முடியாமல் போகும். உயிரையே கூட குடித்து விடும். எனவே கட்டுப்பாட்டுடன் நடந்து காள்வது நல்லது.

பொருளதாரம்
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எந்த விதத்திலாவது சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் சேமிப்பு குறைவாகவே இருக்கும் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும், இவருக்கு வர வேண்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும். பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மன ஸ்தாபங்கள் உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதே நல்லது.

தொழில்
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் அதிக கற்பனைத் திறன் இருக்கும். இவர்கள் கதை, வசனம் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம். சந்திரன் ஜல ராசி என்பதால் பால் வியாபாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை, தூய நீர் தயாரித்தல் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான தொழிலாக அமையும். நல்ல வருவாயும் உண்டாகும். அறிவிப்பாளர் தொழிலும் ஏற்றம் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் அமையும். சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.

நண்பர்கள், பகைவர்கள்
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆதலால் எதிலும் குழப்பவாதியாகவே இருப்பார்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். அப்படி நெருங்கி பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் பிரியமாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களுக்கு 1,5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4,7 போன்ற எண்களில் பிறந்தவர்கள்வர்களிடம் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிக இரக்க மனம் கொண்டவர்கள். ஆதலால் நண்பர்களால் சில நேரங்களில் ஏமாற்றப்படுவார்கள்.

சந்திரனுக்குரிய காலம்
ஆங்கில வருட ரீதியாக ஜுன் மாதம் 21ம் தேதி முதல் ஜுலை மாதம் 22ம் தேதி வரையிலான காலம் சந்திரனுக்கு உரியது. திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும். சந்திரன் இரவில் பலம் உள்ளவன்.

சந்திரனுக்குரிய திசை
சந்திரனுக்குரிய திசை வடக்கு திசையாகும். 2ம் எண் உள்ளவர்கள் வடக்கு நோக்கி பிராயணம் செய்து எந்த பணிகளைத் துவக்கினாலும் நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட கல்
சந்திரனின் எண்ணான 2 ஐ உடையவர்கள் அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதித்து மோதிரமாக தோலில் படும் படி அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் நோய்கள் குறையும். மன அழுத்தங்கள், குழப்பங்கள் விலகி நல்ல தெளிவு கிடைக்கும்.

பரிகாரங்கள்
சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாக இருப்பதால், அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்தல் நல்லது. வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி- 1,10,19,3, 12,21,30
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, பொன் நிறம்
அதிர்ஷ்ட திசை -தென் கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை -திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட கல் – முத்து, சந்திரகாந்தகல்
அதிர்ஷ்ட தெய்வம் – வெங்கடாசலபதி, துர்க்கை

எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் C,G,L,S ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.

குண அமைப்பு
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம்.

முகஸ்துதிக்கு அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.
இவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.

உடலமைப்பும் ஆரோக்கியமும்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும். சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது

குடும்ப வாழ்க்கை
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.

பொருளாதாரம்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

தொழில்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.

நண்பர்கள், பகைவர்கள்
கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள். 5,6 ம் எண்ஙணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.
குருவுக்குரிய காலம்

நவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச் சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.

குருவுக்குரிய திசை
குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கல்
குருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.

பரிகாரங்கள்
குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி,-3,12,21,30
அதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்
அதிர்ஷ்ட திசை – வடக்கு
அதிர்ஷ்ட கிழமை – வியாழன்
அதிர்ஷ்ட கல் -புஷ்பராகம்
அதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி

எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.

குண அமைப்பு
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தைய«£, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.

இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.

உடலமைப்பும், ஆரோக்கியமும்
நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை
நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.

பொருளாதாரம்
நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில்
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.

நண்பர்கள், பகைவர்கள்
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

ராகுவுக்குரிய காலம்
ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.

ராகுவுக்குரிய திசை
தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.

ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்
நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.

பரிகாரங்கள்
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி, -1,10,19,28
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்
அதிர்ஷ்ட திசை -கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு
அதிர்ஷ்ட கல் – கோமேதகம்
அதிர்ஷ்ட தெய்வம்- துர்க்கை

எண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. பஞ்ச என்பது 5 ஐ குறிக்கும். மனித வாழ்க்கை ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களுக்குள் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களில் ஐம்பால்களான ஆண்பால், பெண் பால், பலர் பால், பலவின்பால், ஒன்றன் பால் போன்றவை ஐந்து வகையாகத்தான் அமைந்துள்ளன. நாம் பூமியின் வகைகளைக்கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான கத்தான் பிரித்துள்ளோம். வீட்டில் ஏற்றக்கூடிய குத்து விளக்கில் கூட இந்து முகங்கள் உள்ளதை நாம் அறிவோம். எனவே ஐந்து என்ற எண்ணும் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள சிறப்பான எண்ணாகும். 5, 14, 23 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 5ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக உள்ளார்கள். ஐந்தாம் எண்ணுக்குரிய கிரகம் புதன் பகவானாவார். ஐந்தாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் E,H,N,Xஆகும்.

குண அமைப்பு
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப் போவதைக்கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வெளித் தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளிக்கும் இவர்கள் மிகுந்த காரியவாதிகள். பிடிக்காதவர்களின் தொடர்பை உடனே அறுத்தெறிவார்கள். இவர்களின் பேச்சில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். மற்றவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் மனதிற்குள் சந்தோஷப்படுவார்கள். எதையும் அவசர அவசரமாக செய்து முடிப்பார்கள். சிரிக்க சிரிக்கப் பேசி தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களுக்குத் தனிமை பிடிக்காது.

சமூக வாழ்வில் ஈடுபட்டு தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வார்கள். அறிவும் சாமர்த்தியம் அதிகம் இருந்தாலும் ஆழ் மனதில் ஏதோ ஒரு பயமும், சந்தேகமும் குடி கொண்டிருக்கும். இவரது பேச்சுத் திறமை பிறரை ரசிக்கும்படி வைக்கும். புத்தி கூர்மையும், அறிவாற்றலும் நிறைந்திருப்பதால் எந்தப் பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்ளலாமல் நழுவி விடுவார்கள். அனுபவமும் அறிவாற்றலும் நிறைய உடையவர்கள் என்றாலும், தங்களுடைய குண அமைப்புகளை நேரத்திற்கேற்றார் போல் மாற்றிக்கொள்வார்கள். எந்த விதமான கடின வேலைகளை எடுத்துக் கொண்டாலும், அதை பொறுப்போடு தவறுதலின்றி செய்து முடிப்பார்கள். முடிந்தவரை கடினமான பணிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் இவர்களுக்கு உண்டாவதுண்டு.

உடலமைப்பும், ஆரோக்கியமும்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், அழகான முக அமைப்பும் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒருவிதமான கவர்ச்சி இருக்கும். வேகமாக நடப்பார்கள். பேச்சில் இனிமை இருக்கும். இவர்கள் அதிகமாக சிந்தனை செய்வதால் நரம்பு பலவீனம் அடைந்து நரம்பு தளர்ச்சி நோய் உண்டாகும். தலைவலி, உடல் சோர்வு அதிகமாக இருக்கும். சரியான ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை, முதுகு வலி, கை, கால் வலி, உடல் வலி போன்றவை உண்டாகும். வாயுத் தொல்லையும் இருக்கும் சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் குடல் புண்ணும் ஏற்படும். நன்றாக ஓய்வெடுப்பதும், உணவு பழக்க வழக்கத்தில் சரியான முறையைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

குடும்ப வாழ்க்கை
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை என்பது திருப்தி அளிப்பதாகவே இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக இருந்தாலும் வரக்கூடிய வாழ்க்கையை அனுசரித்து நடப்பவராக இருப்பார். நல்ல அறிவாற்றலும், கல்வித் தகுதியும் உடையவராக இருப்பார். சிறுசிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். இவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ்வதையே விரும்புவார்கள். விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையே இவர்களுக்கு அமையும். கிடைக்காதவற்றிற்கு ஏங்காமல், இருப்பதை வைத்து திருப்தியுடன் வாழ்வர்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரவும் திருப்தியளிப்பதாக இருக்கும். உற்றால், உறவினர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.

பொருளாதாரம்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு போது மென்கிற அளவிற்கு பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும். பகட்டான செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும். ஓய்வு நேரங்களிலும் உடலுழைக்காமல் மூளையை பயன்படுத்தி ஏதோ, ஒரு வழியில் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆதலால் பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். சேமிப்பும் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

தொழில்
ஐந்தாம் எண் அறிவு சம்பந்தமான எண் என்பதால் அறிவுப் பூர்வமான பணிகளும், எதையும் புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வமும் அதிகமிருக்கும். வங்கி கணக்கர் தொழில், ஆடிட்டர் தொழில், கணிப்பொறி சம்பந்தப்பட்ட துறைகளில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு என இது போன்றவற்றில் உயர்வு கிட்டும். ஜோதிடம், வானவியல், காண்ட்ராக்ட் தொழில், எழுத்து துறை, பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கலைத்துறை, இசைத்துறையிலும் உயர்வு ஏற்படும். உடல் உழைப்பு இவர்களால் முடியாத காரியமாகும். அறிவு பலத்தால் எதையும் சாதிப்பார்கள்.

நண்பர்கள், பகைவர்கள்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் சிரிக்க சிரிக்க பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்பத£ல், இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். இவரின் நகைச்சுவையுணர்வால் பலரை கவர்ந்திழுப்பர். 1 மற்றும் 6ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்ணைத் தவிர மற்ற எண்ணில் பிறந்தவர்களும் நட்பாகவே அமைவார்கள்.

புதனுக்குரிய காலம்
ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் 21 ம் தேதி முதல் ஜுன் மாதம் 22ம் தேதி வரையிலும், ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரையிலான காலமும் புதனுக்குரியது. புதன் கிழமை புதனுக்குரியது.

புதனுக்குரிய திசை
வடக்கு திசை புதனுக்குரியது. மலைகள், கல்வி நிலையங்கள், விளையாடும் இடங்கள், வாசக சாலைகள் யாவும் புதனுக்குரியவை. ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் வடக்கு முகமாக எந்த காரியங்களைத் தொடங்கினாலும் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட கல்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் என்பதால் மரகதப் பச்சை என்ற கல்லை அணிய வேண்டும். இதனால் நோய்கள் நீங்கும் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் வெற்றியும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். நரம்பு பலவீனப்பட்டவர்களுக்கு நலம் கிட்டும்.

பரிகாரம்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானை வழிபடுதல் நல்லது. புதனுக்கு பரிகாரம் செய்வதும் உத்தமம்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி-5,14,23,6,15,24
அதிர்ஷ்ட நிறம்- சாம்பல், வெளிர் நீலம், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட திசை -வடக்கு
அதிர்ஷ்ட கல் -வைரம், மரகதப் பச்சை
அதிர்ஷ்ட தெய்வம் -ஸ்ரீவிஷ்ணு

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

மனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன. அதுபோல 6 என்ற எண்ணும் மனித வாழ்வில் சிறந்த முறையில் செல்வாக்கினை பெற்றதாக திகழ்கிறது. 6,15,24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். வாரத்தில் 6ம் நாளாக வெள்ளிக்கிழமை வரும். வெள்ளிக்கிழமை வாரத்தின் சிறந்த நாளாக கருதப்படுகிறது. 6ம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஹி.க்ஷி.கீ ஆகியவைகள் ஆகும்.

குண நலன்கள்
நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள் என்பதால் இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. மிகவும் பொறுமைசாலிகள். ஆதலால் அதிக சகிப்பு தன்மையும் உண்டு. சிந்தனா சக்தியிலும், செயலாற்றுவதிலும் நிதானமாக செயல்பட்டாலும் தன்னம்பிக்கையும் அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும். எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால், சில நேரங்களில் மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சொல் என்றாலும் மறக்க முடியாத அளவிற்கு பேசி விடுவார்கள். கேலியும், கிண்டலும் நையாண்டித் தனமும் அதிகம் இருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள். பிடிவாத குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம். இவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் குறைகளை அம்பலமாக்கி விடுவார்கள். தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும் போது இவருடைய மனநிலை இவரின் கண்களில் தெரியும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள். தனக்கு மிஞ்சியதைத்தான் பிறருக்கு தானமாக கொடுப்பார்கள். சமூக நல்லப்பணிகளிலும் ஆர்வம் இருக்கும்.

உடல் நிலை, ஆரோக்கியம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குள்ளமானவர்களாக இருப்பார்கள். உடல் குண்டாக இருக்கும். கருணை நிறைந்த கண்ஙகளைக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் தம்மை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் குளிர்ச்சியான உடலை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்களும், இருதய சம்பந்தமான வியாதிகளும், சுவாசம் சம்பந்தமான நோய்களும் உண்டாகும். சர்க்கரை நோய் அதிகம் பேருக்கு ஏற்படும். மர்ம பிரதேசங்களில் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குடும்ப வாழ்க்கை
ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும். பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

பொருளாதாரம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆடை, ஆபரணங்களுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் நிறைய செலவு செய்வார்கள். சிலர் பிறவியிலேயே செல்வந்தராக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நடுத்தர வர்க்கம் என்றால் பொருளாதார நிலை பற்றாக்குறையாகவே இருக்கும். எப்பாடுபட்டாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.

நண்பர்கள், பகைவர்கள்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் புதிதாக பழகுவதற்கு சற்று சங்கோஷப்படுபவர்களாக இருந்தாலும், பழகிய பின் இனிமையானவர்களாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ஓட ஓட விரட்டுவார்கள். 4,5,7,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் நட்புடன் பழக முடியும். 1,2 ம் எண்ணில் பிறந்தவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பதே நல்லது.

சுக்கிரனுக்குரிய காலம்
ஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் மே மாதம் 20ம் தேதி வரையிலும், செப்டம்பர் 22 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 22ம் தேதி வரையிலும் உள்ள காலங்கள் சுக்கிரனுக்குரிய காலங்கள் ஆகும்.

தொழில்
ஆறாம் எண்ணிற்குரியவர் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள். சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும். அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும். ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும், கௌரவமும் கிடைக்கும். பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், பெண்கள் அணியும் ஆடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிலும் நல்ல லாபம் அமையும். வாசனை திரவியங்களை வியாபாரம் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.

சுக்கிரனின் திசை
மேற்கு திசையும், தென் மேற்கு திசையும், சுக்கிரனுக்குரிய திசைகள் ஆகும். படுக்கை அறைகள், அழகிய வீடுகள், பயிடும் நிலங்கள் யாவும் சுக்கிரனுக்குரியவை. ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசை நோக்கி பயணம் செய்தபின் புதிய சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்டக்கல்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் வைரக்கல்லை அணிவது மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வைரத்தை வாங்க முடியாதவர்கள் ஜிர்கான கற்களும் வைரத்தை போலவே குணநலன்களை கொண்டதாகும்.

பரிகாரம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது உத்தமம். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி – 6,15,24,9,18,27
அதிர்ஷ்ட நிறம் – வெளிர்நீலம்
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட கிழமை-வெள்ளி
அதிர்ஷ்ட கல்- வைரம்
அதிர்ஷ்ட தெய்வம் – ஸ்ரீலட்சுமி

எண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் ளி. ஞீ ஆகியவை.

குணநலன்கள்
ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. தெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள். தன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள். இதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள். இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள். எந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.

உடல்நிலை ஆரோக்கியம்
ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும். உடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும். மெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். வாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.

குடும்ப வாழ்க்கை
ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள். உற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும். தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதாரம்
ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். இவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர். நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.

தொழில்
ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள். திரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும். மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். உத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.

நண்பர்கள், பகைவர்கள்
ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும். 8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.

கேதுவுக்குரிய காலம்
கேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.

கேதுவுக்குரிய திசை
வடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.

கேதுவுக்குரிய கல்
கேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது. எனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல்லையும் அணியலாம். வைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம்
கேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி – 7,16,25
அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, காவி
அதிர்ஷ்ட திசை-வடமேற்கு
அதிர்ஷ்ட கிழமை -திங்கள்
அதிர்ஷ்ட கல் -வைடூரியம்
அதிர்ஷ்ட தெய்வம்-கணபதி

எண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

ஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல 8 ம் எண்ணிற்கு உண்டு. அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8ம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூட 8 வதாக அஷ்டமி திதியில் பிறந்தவர்தான். ஒவ்வொரு மாதமும் 8,17,26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். 8ம் எண்ணுக்குரிய கிரகம் சனி பகவானாவார். எட்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் தி.றி ஆகும்.

குண நலன்கள்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எப்பேர்பட்ட அவசரமான காரியமாக இருந்தாலும் மிகவும் நிதானமாகவே செய்வார்கள். நிதானமே இவர்களின் பிரதானமாக இருக்கும். தங்கள் கஷ்டங்களை பிறரிடம் சொல்லி உதவி கேட்க மாட்டார்கள். இவர்களும் தன்னால் முடிந்த உதவியை மட்டும் தான் பிறருக்கு செய்வார்கள். எதையும் எளிதில் கிரகித்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும். கடமையே பிரதானமாக கொண்ட இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனையடைய மாட்டார்கள். எந்தக் காரியங்களை எடுத்துக் கொண்டாலும் இருவிதங்களில் ஆதாயம் அடையக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்தை சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பேச்சில் அழுத்தம் திருத்தமும், நிதானமும், உறுதியும் இருக்கும்.

எதிலும் பிரதிபலன் பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தபடியாகத்தான் நினைப்பார்கள். நினைத்ததை விடாத பிடிவாததக்காரர் என்றாலும் வீண் பிடிவாதக்காரர் இல்லை. வீண் பேச்சிலும், வெட்டிப் பேச்சிலும் ஈடுபட மாட்டார். பிறர் தம் மீது கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களுக்கு செவி சாய்க்க மாட்டார். சிரிக்க, சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு, மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலும் உண்டு. எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பவர். ஆதலால் எந்த காரியத்திலும் அதன் சாதகப் பலனை பார்த்த பின்தான் செயலில் ஈடுபடுவார்கள். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவனிப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் மிகவும் திறமை சாலிகள். நியாயம், அநியாயம் இவற்றை தெள்ளத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத குணம் இருக்கும் பிறர் வாழ்க்கையில் எந்த வகையிலும் குறுக்கிடாத உயந்த பண்பும், லட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உடல்நிலை ஆரோக்கியம்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நடுத்தர உயரத்தை விட சற்றே குறைவான உயரம் இருக்கும். முட்டி எலும்புகள் எடுப்பான தோற்றம் அளித்து அழகாக இருக்கும். இவர்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். ஆதலால் கருப்பான நிறமும், சற்று வயது முதிர்ந்தத் தோற்றமும் இருக்கும். நீண்ட கழுத்தும், பரபரப்பில்லாத நடையும், நெற்றியில் ஆழ்ந்த கோடுகளும் இருக்கும். முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். நிதானமாக பேசினாலும் பேச்சில் உறுதி தொனிக்கும். இவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி உண்டாகிக்கொண்டே இருக்கும். வயிற்று வலி, வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்றவைகள் உண்டாகும். தோல் சம்மந்தமான வியாதிகளும் ஏற்படும். மார்புச் சளியும், இவர்களுக்கு தொல்லை கொடுக்கும். எலும்பு சமபந்தப்பட்ட பிரச்சினைகளும் உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிடைப்பதில்லை. தன்னுடைய முயற்சி தவறு எனத் தெரிந்தவுடன் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என நழுவி விடுவார்கள். வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை மிகவும் சிக்கனமானவராகவும் எதிர்த்து பேசாத குணசாலியாகவும் இருப்பார். கணவன், மனைவி இருவரும் எப்போதும் இணைபிரியாது ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திரர்களால் மிகச் சிறப்பான அனுகூலம் இருக்கும். உடன் பிறப்புகளை மிகவும் அனுசரித்து செல்பவர்களாக இருப்பார்கள்.

பொருளாதாரம்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்றபடி பணவசதியும் உண்டாகி கொண்டே இருக்கும். தங்களுடைய சுக வாழ்க்கைக்காக இவர்களது வருமானம் முழுவதும் செலவழியும். தாமே சுயமாக உழைத்து பூமி, வீடு, வாகனம் முதலியவற்றை அமைத்துக் கொள்வார்கள். கொடுக்கல், வாங்கலில் இவர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். தாராள மனப்போக்காலும், பிறருக்கு உதவி செய்ய நினைக்கும் பண்பாலும் கடன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. எவ்வளவு கடன்கள் ஏற்பட்டாலும் அவற்றைக் குறித்த நேரத்தில் அடைக்கும் ஆற்றலும் உண்டு. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறமாட்டார்கள். சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மேல் அலாதி விருப்பம் உடையவராக இருப்பார்கள்.

தொழில்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மிக கடினமான வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான தொழில்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். குறிப்பாக இரும்பு உருக்குதல், அச்சு வார்த்தல், பாத்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள் போன்றவைகள் இவர்களுக்கு ஏற்றது. பெரிய கரும்பாலைகள், எண்ணெய் எடுக்கும் செக்கு போன்றவை ஏற்றம் தரும். நீதிபதிகள், வக்கீல்கள், இராணுவ அதிகாரிகள், இரயில்வே அதிகாரிகள் போன்ற துறைகளும் 8ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அமையும். சிலருக்கு விவசாயப் பணி, நிலபுலன்கள், பெரிய காண்டிராக்டர்கள் போன்ற துறைகளும் முன்னேற்றம் கொடுக்கும். அடிமைத் தொழில்கள் சிலருக்கு அமைந்தாலும் படிப்படியாக முன்னேறி விடுவார்கள்.

நண்பர்களும் பகைவர்களும்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக பேசி பிறரை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்றாலும் திடீரென்று கோபம் கொள்வார்கள். இவர்களுக்கு எப்பொழுது கோபம் வரும் என்று கூறமுடியாது. தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என பிடிவாதம் பிடிக்கும் இவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதற்கு 4,5,6,7 போன்ற எண்ணில் பிறந்தவர்களே தகுதியானவர்கள் 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

சனிக்குரிய காலம்
டிசம்பர் மாதம் 22ம் தேதி முதல் பிப்ரவரி 18 ம் தேதி வரையிலான காலம் சனிக்குரியது. சனி இரவில் பலமுடையவன். சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்ததாகும். குறுகிய கால அளவில் ஓர் ஆண்டு காலம் சனிக்குரியது.

சனிக்குரிய திசை
தெற்கு அல்லது தென் கிழக்கு சனிக்குரிய திசையாகும். எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசைகளில் எந்த பணிகளைத் துவங்கினாலும் வெற்றி கிட்டும். குகைகள், சுடுகாடுகள், சுரங்கங்கள், பழைய பாழடைந்த வீடுகள், பாலைவனங்கள் போன்ற யாவும் சனிக்குரிய பிரதேசங்களாகும்.

சனிக்குரிய கல்
சனிக்குரிய கல் நீலம். நிறத்தின் பெயராலேயே இக்கல் நீலம் என்றழைக்கப்படுகிறது. எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டும்தான் நீல நிறக் கல்லை அணிய வேண்டும். அதிலும் மிக ஆழ்ந்த நீலநிறக் கல்லை அணியக்கூடாது. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அக்காலங்களில் மட்டும் நீலக்கல்லை அணிந்து கொள்ளலாம். நீலகற்களுக்கு பதிலாக அக்கோமரின் கற்களையும் பயன்படுத்தலாம். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் இக்கல்லை அணியக்கூடாது.

பரிகாரம்
எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்கு பூக்களால் அலங்கரித்து கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்சநேயரையும் வழிபடலாம். தினமும் காக்கைக்கு அன்னம் வைப்பது நல்லது. ஏழை, எளியவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்யலாம். இதனால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி – 8,17,26
அதிர்ஷ்ட நிறம்-கருப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசை-தெற்கு
அதிர்ஷ்ட கிழமை- சனி, புதன்
அதிர்ஷ்ட கல் – நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்-ஐயப்பன்

எண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம் எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு. ஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.

குணநலன்கள்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப்பெற்றிருப்பார்கள். கலா ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் தமக்குத் தெரிந்த விஷயம் போலவே காட்டிக் கொள்வார்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். எதையுமே தனக்கு பிடித்த மாதிரிதான் செய்ய வேண்டுமென்ற பிடிவாத குணம் இருக்கும். வெகுளியாகவும் கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவார்கள். வாத பிரதிவாதங்களில் திறமையோடு வாதித்து தனது அபிப்ராயத்தை அங்கு நிலைநாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து அவர்களுக்கு உதவி செய்வார்கள். தனது அந்தஸ்துக்கும் புகழுக்கும் பழுது ஏற்படாத பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். மன அமைதியை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் அதை பிறருக்கு தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்கள்.

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயற்கையிலேயே அஞ்சா நெஞ்சமும் தைரியமும் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் காரியவாதிகள். ஆதலால் வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். இவர்களது சுயேற்சையான சுபாவத்தையும், அகங்கார குணத்தையும் கண்டு இவர்களை நேசிப்பவர்கள் கூட சில சமயம் வெறுப்படைந்து விடுவார்கள். பெரியவர்களிடத்தில் மரியாதையும், சிறியவர்களை அடக்கியாளும் குணமும் இருக்கும். மற்றவர்களின் குற்றம் குறைகளை கண்டு பிடித்து அம்பல மாக்குவதில் தனிக்கவனம் செலுத்துவார்கள். இவர்களை துணையாக கொண்டால் எந்தக் காரியத்திலும் எதையும் சாதித்த வெற்றி பெறமுடியும்.

உடல் நிலை ஆரோக்கியம்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், சுருட்டையான தலைமுடியும் இருக்கும். பார்ப்பதற்கு வெகுளியாகக காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். நீண்ட மூக்கும் அடர்த்தியான பல் வரிசையும் கொண்டவர்கள். ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாதலால் இவர்களுக்கு பெரும்பாலும் உடலில் காயங்கள், இரத்தக் கசிவுகள் போன்றவை ஏற்படக்கூடும். உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். முடிந்தவரை மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்தால் உடல் நிலை சிறப்பாக அமையும்.

குடும்ப வாழ்க்கை
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதில் பாதிப் பேருக்கு சுகமான சுபிட்சமான வாழ்க்கையும், வாழ்க்கை துணையால் முன்ன«ற்றங்கள் போன்றவை அமைந்தாலும் பாதிப்பேருக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களும் குழப்பங்களும் உண்டாகிறது. இதனால் விரக்தியான மனோநிலைகளும் ஏற்படுகிறது. இதனால் எதையும் சிந்தித்து சரியான முறையில் அனுசரித்து நடந்தால் மட்டுமே நற்பலனைப் பெற முடியும். ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தாயின் ஆதரவு அவ்வளவாக கிடைப்பதில்லை. உடன் பிறந்தவர்கள் மீது இவர்களுக்கு பாசம் அதிகம் இருந்தாலும் அவர்களால் ஒரு பிரயோசனமும் உண்டாவதில்லை. இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்ப வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

பொருளாதார நிலை
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் சகல வசதிகளையும் பெற்று சுக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு தேவைக்கேற்ப பணவசதி ஏற்படுமே தவிர சேமிக்கும் அளவிற்கு இருக்காது. வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும். வாழ்க்கையின் முற்பாதியில் பொருளாதார நிலையில் சங்கடங்கள் இருந்தாலும் பிற்பாதியில் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒரு சிலருக்கே பொருளுதவிகள் கிடைக்கும். வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்யக்கூடிய வாழ்க்கை இணை அமைந்த போதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தங்களுக்கு தேவைற்ற கடன்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். பெரும்பாலும் தங்களுடைய கௌரவத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள எப்பாடுபட்டாவது சம்பாதித்து முன்னேறி விடுவார்கள்.

தொழில்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழிலை ஏற்றுக் கொண்டாலும் அதை திறம்பட நிர்வாகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய உயர் பதவிகளை கிடைக்கும். பலர் ஆயுதங்களை தாங்கி பணி செய்யக்கூடிய மிலிட்டரி, போலீஸ் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மற்றும் தீயுடனும், மின்சாரத்துடனும் தொடர்பு கொண்டதுறைகளிலும் பணிபுரிவார்கள். போர்க்கலைகள், மல்யுத்தம், மலையேறுதல், விளையாட்டுத் துறைகளில் பயிற்றுவிக்கும் பணி போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய பணியாக இருந்தாலும் துணிச்சலுடன் செய்வித்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்று விடுவார்கள். சிலர் மருத்துவ துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்குவார்கள்.

நண்பர்கள், பகைவர்கள்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் வீரத்தின் சின்னமாக விளங்குகிறார்கள். இவர்களுக்கு அதிகார தோரணையும்,பிறருக்கு ஆடிபணியாத குணமும் இருக்கும் என்றாலும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய குணமும் உண்டு. இவர்களது அதிகார குணம் மற்றவர்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் போற்றுவதற்கு பதில் தூற்றுவற்குரியதாக இருக்கும். என்றாலும் இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் இவர்கள் அவ்வளவு எளிதில் மயங்கி விடுவதில்லை. இவர்களுக்கு 1,2,3 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். 4,5,7 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் ஒத்தப்போகமுடியாது.

செவ்வாக்குரிய காலம்
மார்ச் மாதம் 21ம் தேதி முதல் ஏப்ரல்19ம் தேதி வரையிலும், அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரையிலும் செவ்வாயக்குரிய காலமாகும். இந்த எண்ணில் உள்ளவர்கள் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்தால் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள். இரவில் வலிமை கொண்டவன் செவ்வாய். செவ்வாய்க்குரிய நாள் செவ்வாய் கிழமையாகும். குறுகிய கால அளவில் ஒருநாள் செவ்வாக்குரிய காலமாகும். செவ்வாய் ஓரையில் இயந்திரங்கள், நெருப்பு சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.

செவ்வாய்க்குரிய திசை
செவ்வாய்க்குரிய திசை தெற்கு, சமையல் அறை, கசாப்பு கடை, போர்க்களம் போன்றவை செவ்வாயக்குரிய இடங்களாகும்.

செவ்வாய்க்குரிய கல்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் அதிக்கத்திற்குரியவர்கள். ஆதலால் அவர்கள் அணிய வேண்டிய கல் பவளமாகும். மிகச் சிறந்த பவளம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்று இருக்கும். பவளத்திற்கு அடுத்து ப்ளட் ஸ்டோன் என்ற கல்லையும் அணிந்து கொள்ளலாம்.

பரிகாரம்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் கொண்டவர்கள். ஆதலால் முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாகும். சஷ்டி விரதங்களும் மேற்கொள்ளலாம். கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி-9,18,27
அதிர்ஷ்ட நிறம் -சிவப்பு