‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் இரண்டாவது பகுதி இது!
‘ஏண்டி உன்னை அம்மணமா நிக்க வச்சு விசாரிச்சாத்தான் பிடிக்குமோ’ என்று சொல்வதே அப்போதைக்கு அவர்களிடம் இருந்த ஓரளவு நாகரிகமான வார்த்தை எனலாம்.
அதைவிட இன்னும் கொச்சையாக இருந்தன அந்த அதிகாரியின் வார்த்தைகள். மனநிலை பலகீனமானவர்கள் கேட்டிருந்தால், உயிரை விட்டிருப்பார்கள்.
அந்த வார்த்தைகள் எந்த மனிதனது சுயமரியாதை உணர்ச்சிகளையும் சூடு, சுரணைகளையும் வேருடன் பிடுங்கி எறிந்துவிடும்.
அவர்களின் சொல்லுக்கு ஆடுகிற தலையாட்டி பொம்மையாக, நடைபிணமாக மாற வேண்டும். அதற்குத் தடையாக இருந்தது என்னிடம் இருந்த அடிப்படை சுபாவங்கள்தான். அதை அழித்துவிட இப்படி அருவருப்பான சித்ரவதைகள் மூலம் முயற்சிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.
ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண் ஆசைப்பட்டு சாப்பிடுகிற எந்தச் சாப்பாட்டையும், என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. என் வயிற்றில் இருக்கும் குழந்தைதான் அப்போது எனக்கு முக்கியமாகப்பட்டது.
என்னைப் பட்டினி போட்டு, தாகத்துடன் தவிக்கவிட்டு, ரசிப்பதுகூட அவர்களது சித்ரவதைகளில் ஒன்றாக இருந்தது. இப்படி பட்டினி போட்டால், வயிற்றில் உள்ள குழந்தை இறந்து போகலாம். அதன் பிறகாவது என் மனதைக் கரைக்க முடியும். என் கணவரிடம் இருந்து என்னைப் பிரித்துவிட முடியும் என்ற தப்புக்கணக்கில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
சி.பி.ஐ கஸ்டடியில் இருந்த ஒவ்வொரு நாளும் நான் வேதனையை மட்டுமல்ல; கொடிய சித்ரவதையையும் அனுபவித்தேன். குறிப்பாக, கடைசி 20 நாட்களில் தினமும் என்னை இரவு, பகல் என்று தூங்கவே விடாமல் கொடுமைப்படுத்தினார்கள்.
ஒரு நாள், என்னை வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். எங்கெங்கோ சுற்றிக்கொண்டு, அடையாறு பகுதியில் உள்ள நவீன மருத்துவமனைக்கு அந்த வாகனம் சென்றது. ஒரு பெண் மருத்துவரின் வரவேற்பு அறையில் நிறுத்தி வைக்கப்பட்டேன்.
சில மணி நேரம் கழித்து உள்ளே அழைக்கப்பட்டேன். அந்த மருத்துவரால் நான் சோதனை செய்யப்பட்டேன். எனது உடலைப் பார்வையிட்ட அந்த மருத்துவரின் முகம் மாறத் தொடங்கியது. நிறைய இடங்களில் அடித்த காயமும் தழும்புமாக இருந்தது. என் கை, கால்களை விலங்கிட்டு வைத்திருந்ததால், அந்த இடமெல்லாம் சீழும், ரத்தமுமாகப் புண்ணாகி இருந்தது. மருத்துவருக்கு முகம் சுருங்கிப் போனது.
என் உடலைச் சோதித்த அவர், ‘கரு நன்றாக வளர்ந்து விட்டதும்மா. காலம் கடந்துவிட்டது. இப்போது அபார்ஷன் செய்தால் உன் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். என்ன படிச்சிருக்க? இதெல்லாம் உனக்குத் தெரியாதா?. ஏன் அபார்ஷன் பண்ணனும்னு சொல்ற?’ என்று எதார்த்தமாகக் கேட்டார்.
இதுதான் சரியான தருணம் என்று நான் அவரது கைகளை கால்களாகப் பிடித்துக் கொண்டு, அழுதபடியே நடந்தவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் உருக்கமாகக் கூறி முடித்தேன். ‘மேடம். இந்த குழந்தைக்காகத்தான். நான் இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து கலைத்து விடாதீர்கள்’ என இரு கரம் கூப்பி அழுதுபடியே வேண்டினேன்.
வெளியே நின்றிருந்த அதிகாரியை அழைத்த அந்த மருத்துவர், ‘இந்தப் பெண்ணின் கருவைக் கலைப்பதற்கான காலக்கெடு தாண்டிவிட்டது. இதற்குமேல் கருவை கலைப்பது டேஞ்சர். அந்தப் பெண்ணின் உடல் நிலையும் பலவீனமாக இருக்கிறது. அபார்ஷன் செய்தால் அவர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. அவரது உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’ என்றார்.
அப்போது அந்த அதிகாரி, ‘இல்லைங்க மேடம். இது மிக முக்கியமான கேஸ். மொத்த ரகசியமும் இவளிடம்தான் இருக்கிறது. ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாள். அதற்குக் காரணம் இந்தக் கருதான். இதை கலைத்து விட்டால், எங்களுக்கு எளிதாக வழி கிடைத்துவிடும்’ என்று வாதாடினார்.
அதற்கு அந்த மருத்துவர், ‘நான் சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள். என்னால் அப்படிச் செய்ய முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு கொலையைச் செய்வதாக மாறிவிடும். தெரியாமல் நடப்பது வேறு. தெரிந்தே செய்வது கொலை. நான் அதற்குத் தயாராக இல்லை’ என்றார்.
அதற்கு அந்த அதிகாரி, ‘நாங்கள் இதை விரும்பிச் செய்யவில்லை. இந்த வழக்கோட தன்மை அப்படிச் செய்ய வைக்கிறது’ என்றார். அதன் பிறகு இருவருக்கும், அதிக நேரம் விவாதங்கள் நடந்தன. ‘என்னால் முடியாது. நீங்கள் வேறு மருத்துவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அந்த மருத்துவர் சொன்னார்.
பிறகு இறுதியாக, ‘உங்கள் டிபார்ட்மென்டிலேயே ஒரு மருத்துவ மனையை உருவாக்கிக் கொள்ளுங்களேன். அங்கிருப்பவர்கள் உங்களின் உத்தரவை ஏற்றுச் செயல்பட வாய்ப்பிருக்கும்’ என்று சொல்லி கடுமையாகத் திட்டி , ‘தயவுசெய்து வெளியே சென்றுவிடுங்கள்’ என்றார்.
எனக்கு அந்தப் பெண் மருத்துவரின் துணிச்சலைக் காண பிரமிப்பாக இருந்தது. எனக்கு அந்தப் பெண் மருத்துவர் யார் என்றே தெரியாது. ஆனாலும், என் மனதில் தெய்வமாக நின்று விட்டார்.
அன்று அவர் துணிந்து கருக் கலைப்பை செய்திருந்தால், அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்து படித்து, இன்று லண்டனில் ஒரு மருத்துவராக மாறி இருக்கமுடியாது. நானும் இப்படி எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். இருவருமே செத்துப் போயிருப்போம்.
அதனால்தான் சொல்கிறேன். அந்தப் பெண் மருத்துவர் எனக்குத் தெய்வமாகத் தோன்றினார். இன்றும் எனது தினசரிப் பிரார்த்தனையில் அவருக்காகவும் வேண்டிக் கொண்டு வருகிறேன். அவரும், அவரது குடும்பத்தாரும், நீடூடி வாழ வேண்டும்.
அதன்பிறகு எனக்கு நடந்த விசாரணைகள் எல்லாம் மோசமாகத் தொடர்ந்தன. என் கருவைக் கலைத்துவிட வேண்டுமென, இவ்வளவு மெனக்கெட்ட வர்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்ற பயம் என் உறக்கத்தைக் கெடுத்தது. தூங்கும்போது, பக்கவாட்டில் கூனிக் குறுகி, கைகளால் வயிற்றைப் பாதுகாத்த வண்ணமே படுப்பேன். நான் தூங்கும்போது ஏதாவது ஊசியைப் போட்டுவிட்டால் என்னாவது என்ற பயம்.
விசாரணைக்கு என வந்த அதிகாரிகளுக்கு ஒரு வெறியும், மோகமும் இருந்தது. பதவி உயர்வு என்ற வெறியும், ஊதிய உயர்வு என்ற மோகமும்தான் அது. அதே நேரத்தில் எல்லா அதிகாரிகளும், காவலர்களும் பதவி வெறியில் இருந்தார்கள் எனக் கூற முடியாது.
எனது தாலியை அறுத்தெறிந்தவர்தான் தலைமைப் புலனாய்வு அதிகாரியான ரகோத்தமன். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் மனசாட்சி உள்ளவராகவே நடந்து கொண்டார். எனக்கு ஏதும் நடந்துவிடக் கூடாது என பகல் முழுவதும் தன் பார்வையில் வைத்திருப்பார். எனக்கும், என் கணவருக்கும் நடந்த சித்ரவதைகள் பெரும்பாலும் அவர் இல்லாத நேரங்களில் நடந்தன. சிலவற்றை அவரால் தடுக்க முடியவில்லை.
அவருக்கும் மேலாக ஒருவர் உத்தரவிட்டுக் கொண்டு இருக்கும்போது பாவம் அவரால் என்னசெய்ய முடியும்? என்னைக் கடைசியாகத் தொடர்ந்து 20 நாட்கள் சித்ரவதை செய்து, விசாரித்த 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் தியாகராஜனும் ஒருவர். மிக மோசமான சித்ரவதையைக் கையாண்டவர். நான் கைகூப்பி கதறியபடி அவரது காலில் விழப்போனேன். பட்டென்று என் மார்பில் அடித்த வேகத்தோடு, என் சுடிதார் துப்பட்டாவை அப்படியே பிடித்து இழுத்தார். அவர் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை.
‘இது தொடக்கம்தான். வெளியே பையன்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உன்னை நிர்வாணமாக்கி விட்டு, வெளியே போய்விடுவேன். பிறகு என்ன நடக்கும் என்று புரிகிறதா?’ என முறைத்தார். மேலும் ஒரு அடி முன்னே வந்து, சுடிதார் துணி மீது கை வைத்து இழுத்தார். அது கிழியத் தொடங்கியது. அதற்கு மேலும் என்னால் நிற்க முடியவில்லை. படாரென்று விழுந்துவிட்டேன். ’சார் வேண்டாம். நீங்கள் சொல்கிறபடியெல்லாம் கேட்கிறேன் சார். என்னை எதுவும் செய்யாதீங்க’ என்று கதறியபடியே அவருடைய காலில் விழுந்து விட்டேன்.
அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவர். பேசாமல் சென்று அவரது நாற்காலியில் அமர்ந்துவிட்டார். பிறகு, கணினியில் ஏற்கெனவே தட்டச்சு செய்து வைத்திருந்த, தாள்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு தாளாக எடுத்து, அதில் என்ன எழுதப்பட்டிருந்ததோ அதை தன் கைபட எழுதிக் கொண்டிருந்தார். அதில் உள்ளதை அப்படியே எழுதினால், முழுக்க முழுக்க அவர்களாகவே எழுதிய போலி வாக்குமூலம் எனத் தெரிந்துவிடும் என நினைத்து, அவ்வப்போது என்னிடமும் சில வார்த்தைகளை, நிகழ்வுகளைக் கேட்டு அதையும் குறுக்கே சேர்த்துக்கொண்டு வந்தார்.
அதாவது, பல பொய்களுக்கு மத்தியில், ஒரு உண்மையைப் போட்டு எழுதி வந்தால், மொத்தமும் உண்மையாகி விடும் என்பார்களே அப்படி. தடா சட்டப்படி, ஒருவர் மனம் உவந்து கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, மற்ற கைதிகளுக்கானத் தண்டனையையும் வாங்கித் தரமுடியும். இது எனக்கு அப்போது தெரியாது. அவர் விருப்பப்படியே தயாரித்த வாக்குமூலத்தில் என் கையொப்பங்களை வாங்கிக் கொண்டார்கள். சி.பி.ஐ கஸ்டடியில் வைத்திருந்த 60 நாட்களும் இப்படிச் சித்ரவதைகளோடுதான் கழிந்தன.
எங்கள் எல்லோரிடமும் வாக்குமூலம் வாங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன், 22 ஆண்டுகள் கழித்து ‘நான் நீதிப்பிழை செய்துவிட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார்.
பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை நான் எழுதியபோது ‘எதற்கு எனத் தெரியாமல்’ என்ற வார்த்தையை எழுதாமல் விட்டுவிட்டதாக தியாகராஜன் சொல்லி இருக்கிறார். சுற்றி வளைத்து தன்னை ஒரு நேர்மையான அதிகாரி போன்று காட்டிக்கொள்ள அவர் ஆசைப்படுகிறார்.
தியாகராஜன் பேட்டி கொடுத்ததாக, ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பேட்டியில், ‘1991 மே மாதம் 7-ம் தேதிக்கு முன்பாக ஒரே ஒரு பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் ராஜீவ் காந்தி கொலைச் சதி பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பதற்கு வயர்லெஸ் செய்திகள் ஆதாரமாக உள்ளன’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.
ஒரு பெண்ணைத் தவிர’ என்று குறிப்பிடும்போது அங்கே என் புகைப்படத்தை இடைச்செருகல் செய்து காட்டுகிறார்கள். நளினியாகிய என்னிடம் இருந்து புலிகளின் தலைமைக்குத் தகவல் போயிருப்பதாகக் காட்சி அமைப்பை உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள். இது எப்படியான விஷமத்தனம்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஆவணங்கள், குற்றவாளிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், மேல் முறையீட்டை எடுத்து நடத்திய உச்ச நீதிமன்றம் ஆகிய அனைத்திலும், எந்த இடத்திலும் அப்படி ஒரு தகவலை, செய்தியைச் சொல்லவே இல்லை. ஜெயின் கமிஷன் விசாரணையிலும் சரி, வர்மா கமிஷன் அறிக்கையிலும் சரி அப்படி எந்த ஒரு குறிப்புமே இல்லை.
சிவராஜன் வன்னிக்கு அனுப்பியதாகச் சொல்லும் அந்த வயர்லெஸ் உரையாடலில் ‘தமிழகத்தில் சிவராஜன், தணு, சுபா ஆகிய 3 பேரைத் தவிர வேறு யாருக்கும் கொலைச் சதித்திட்டம் தெரியாது’ என்றுதான் இருக்கிறது. இதைத்தான் உச்ச நீதிமன்றமும் தன்னுடைய தீர்ப்பில் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறது.
எந்த இடத்திலும் கொலைச் சதி பற்றிய தகவல் நளினியாகிய எனக்குத் தெரிந்திருந்ததாகவே கூறப்படவில்லை. ஆனால் நான் கால் நூற்றாண்டு காலமாக எல்லாத் துன்பங்களையும் அனுபவித்துவிட்டேன்.
இந்த நிலையில்தான், பிரியங்கா என்னைச் சந்திக்க வந்தார். அவர் வரும் வரை யார் வரப்போகிறார்கள் என்றும் தெரியாது. வந்தபிறகும் இவர்தான் பிரியங்கா என்றும் தெரியாது!-
அது பற்றி அடுத்த இதழில்…
‘‘முருகனே நளினியிடம் பேசி அனுமதி வாங்கித்தந்தார்!”
இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கும் பத்திரிகையாளர் பா.ஏகலைவன், ‘‘2010-ம் ஆண்டு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். அவரைப் பார்க்க, நானும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியும் வேலூர் சிறைக்குச் சென்றிருந்தோம்.
அப்போதுதான், ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேரையும் நேரில் சந்தித்தேன்.
அந்த நேரத்தில், இந்த வழக்கில் வெளியில் தெரியாமல், புதைந்துகிடக்கும் பல விஷயங்களை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
இதில் முதல் குற்றவாளியாக இருக்கும் நளினியின் தரப்பு இதுவரை வெளியிலேயே வரவில்லை. அதனால், நளினியின் தரப்பில் இருந்து இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்றும் நினைத்தேன்.
என்னுடன் பேசிக்கொண்டிருந்த முருகனும், தனக்கும் இப்படி ஒரு எண்ணம் இருப்பதாக தெரிவித்தார். புத்தகம் எழுத முடிவானது. நளினியிடம் பேசி முருகனே அதற்கு அனுமதியும் வாங்கினார்.
முருகன் நளினி மூலமாக சொன்ன வாய்வழித் தகவல், பலநூறு பக்கங்களைக் கொண்ட அவர்களின் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்டவைதான் இந்தப் புத்தகத்துக்கு மூலம்.
சமயங்களில் நான் முருகனிடம் இருந்து விவரங்களைப் பெற முடியாத நேரத்தில், வேலூரைச் சேர்ந்த தம்பி கி.டி.சரவணன், ஈரோட்டைச் சேர்ந்த தம்பி பேரறிவாளன் ஆகியோர் முருகனிடம் இருந்து விவரங்களைப் பெற்றுத் தந்தனர்.
புத்தகம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பிறகு, வழக்கறிஞர் புகழேந்தியின் மூலம் சில தகவல்கள் மற்றும் பெயர் விவரங்களை உறுதிப்படுத்தினேன்.
அதன்பிறகு, இந்தப் புத்தகம் நளினிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவர் அணிந்துரை வழங்கினார். மொத்தமாக, என்னுடைய 6 ஆண்டுகால உழைப்பின் விளைவாக இப்போது புத்தகம் முழுமை அடைந்துள்ளது” என்றார்.