ஈரோட்டில் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பிரபாகரன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டினார். மேலும் புத்தகங்களையும் அறிமுகம் செய்து வைத்து வைகோ பேசியதாவது:-
பிரபாகரன் இந்தியாவை பெரிதும் நம்பினார். ஆனால் அவருக்கு இந்தியா துரோகம் தான் செய்தது. பாராளு மன்றத்தில் நான் ராஜீவ்காந்திக்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளேன். ஆனாலும் என் மீது ராஜீவ் அன்பாக இருந்தார்.
விடுதலை புலிகள் இயக்கம் பற்றி பேசி அவரது மனதை மாற்றம் செய்து வைத்திருந்தேன் அவரும் விடுதலை புலிகளுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டினார். ஆனால் டெல்லியில் உள்ள அதிகாரிகள் ராஜீவ் மனதை மாற்றி விட்டார்கள். அதே நேரம் போபர்ஸ் ஊழல் தொடர்பாக அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது. அதில் இருந்து பிரச்சினையை திசை திருப்ப இலங்கை- இந்தியா ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பிறகு தான் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது.
வன்னி காட்டில் பிரபாகரன் மறைந்திருந்து மிகப் பெரிய படையை உருவாக்கினார். அனைத்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். எனக்கும் பிரபாகரன் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தான் எனக்கு வெளிநாடுகள் செல்ல விசா மறுக்கப்பட்டு வருகிறது.
எனக்கு பதவி மீது எந்த மோகமும் இல்லை. எனது லட்சியம், கனவு எல்லாம் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது தான். தமிழ் ஈழ தாயகம் காண தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
விழாவில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கணேசமூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராம கிருஷ்ணன், மாவட்ட செய லாளர் குமரகுருபரன், இளை ஞர் அணி செயலாளர் சந்திரன், டி.எஸ்.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண் டனர். * * * ஈரோட்டில் நடந்த பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேக் வெட்டிய காட்சி.