கூட்டு எதிர்க்கட்சியின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது குறித்து ஆராயும் நோக்கில் ஆளும் கட்சி கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் இன்றைய தினம் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2002-2004ம் ஆண்டு காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
2004ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது தற்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் போலியாக குற்றம் சுமத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கலந்துரையாடி உரிய பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அவைத் தலைவரிடம் கோரியுள்ளனர்.
இதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.