ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் 450 இந்தியர்கள் தொடர்பு – உளவுத்துறை எச்சரிக்கை

சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மற்ற நாடுகளிலும் நாசவேலைகளில் ஈடுபட தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பல நாடுகளில் தங்கள் இயக்கத்துக்கு தேவையான ஆட்களை பிடிக்கும் செயலில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களை தங்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து வருகிறார்கள். மத்திய அரசு அவர்களை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது.

என்றாலும் சில இளைஞர்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் உணர்ச்சியூட்டும் பேச்சு, படங்கள், கட்டுரைகளைப் பார்த்துவிட்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாளர்களாக மாறி வருகிறார்கள். அப்படிப்பட்ட 68 பேரை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். இந்த ஆண்டு இதுவரை 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக சுமார் 450 பேர் இருப்பதாக மத்திய உள்துறை கூறியுள்ளது. ஐதராபாத்தில் 3 நாட்கள் நடந்த டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஆதரிக்கும் 450 பேரையும் தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.