தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறாரா ‘தங்கம்’ மாரியப்பன்?

தமிழக வீரர் மாரியப்பன் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று மாநிலத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்த்தார். இந்நிலையில் அவர் தமிழகத்தை விட்டுவிட்டு பெங்களூரில் செட்டில் ஆகவுள்ளதாகவும், இனிவரும் நாட்களில் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளதாகவும் வதந்திகள் பரவின

இந்த வதந்திக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறியதாவது: ”யாராவது தாய் மண்ணை விட்டு விட்டு வெளியேறி வேறு மாநிலத்துக்காக விளையாடுவாங்களா?. எனக்கு  ஊக்கமும் வாய்ப்பும் அளித்தது இந்த மண்தான். இப்போ கொஞ்சம் பிசி. விழாக்களில் பங்கேற்க ஏராளமான அழைப்பு வருகிறது. அதனால், எந்த விவகாரத்திலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அந்த கேப்பில்தான் வதந்திகளை பரப்பி விடுகின்றனர்.

லண்டனில் நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டில ரிக்கார்ட் படைத்து தங்கம் வெல்ல வேண்டும். அதனை இலக்காக கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன். உலகச் சாம்பியன்ஷிப்புல கண்டிப்பா தங்கம் ஜெயிப்பேன். ஆனால், சாதனை படைக்க வேண்டுமென்பதுதான் இலக்கு. அதுக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் எனது பயிற்சி பெங்களூருவில்தான் நடைபெறுகிறது. அங்கேதான் பெரும்பாலான நாட்கள் இருக்கிறேன். அதனால், அவர்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம்.

யார் வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும். ஆனால், நான் கடைசி வரை தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் விளையாடுவேன் ”என உறுதிபடக் கூறினார்.