தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குரங்கு குட்டி ஒன்று கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து இறந்தது.
இறந்த குட்டியை சுற்றி வந்து தாய் குரங்கு பரிதவித்த காட்சி, அங்கிருந்தவர்களின் மனதை உலுக்கியது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும், ஏராளமான மரங்கள் உள்ளன. இங்கு, 50க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.
தொந்தரவு செய்யும் இவற்றை, வனத்துறையினர் அவ்வப்போது பிடித்து அப்புறப்படுத்தினாலும், மீண்டும் வந்து விடுகின்றன.
நேற்று காலை, விளையாடிக் கொண்டிருந்த குரங்குகளில், குட்டிக் குரங்கு ஒன்று, தாய் குரங்கின் பிடியில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்து, இறந்தது.
இதைக் கண்ட தாய் குரங்கும், பிற குட்டி குரங்குகளும் சோகமாக, கண்ணீர் மல்க சுற்றி வந்து, சத்தமிட்டன.
இறந்த குரங்கு குட்டியை, தாய் குரங்கு, தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் தூக்கிச் சென்றது.
வனத் துறையினர் எவ்வளவு முயற்சித்தும், இறந்த குட்டியை அதன் தாய் குரங்கிடம் இருந்து மீட்க முடியவில்லை.
இந்த காட்சிகள் மாலை வரை நீடித்தது.
குறைதீர் கூட்டத்திற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்களுக்கு இந்த காட்சிகள் உருக்கமாக அமைந்திருந்தன.