ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் திறைச்சேரியில் 40000 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை மாத்தறை நில்வளா கங்கை திட்டத்திற்காக வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த பணம் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பணம் காணாமல் போயிருந்தால் அது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கதாக மாறிய சந்தர்ப்பத்தில் தான் அமைச்சின் நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவ்வாறான முறைகேடு இடம்பெற்றிருந்தால் உடனடியாக அது தொடர்பில் ஆராய்ந்து குற்றவாளிக்கு தண்டனை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் காலியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட மைத்திரி, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் திறைசேரியில் இருந்து 40000 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை ஒன்று நில்வளா கங்கை திட்டத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாராவது இவ்வாறான ஒன்றை மேற்கொண்டிருந்தால், யாருடைய உத்தரவில் மேற்கொள்ளப்பட்டதென்பதனை கண்டுபிடித்து அது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.