சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு புறமிருந்தாலும் தற்போது பெண் பொலிஸார் கூட பாலியல் ரீதியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கர்ப்பிணி தாய்மார்களுக்கான 2000 ரூபா போசனைக் கொடுப்பனவுக்கான நிதி இம்முறை பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதா? எங்கே சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விசேட நீதிமன்றம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிற்கு நிதி 4 மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் 75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சிறுவர் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது.
குறித்த அமைச்சுக்கு நிதி அதிகரிக்க வேண்டும். அத்துடன் சிறுவர்களுக்கான 2000 ரூபா போசனைக் கொடுப்பனவுக்கு கடந்த முறை 7500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை 5500 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏன் நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதா? அதுமாத்திரமன்றி 2000 ரூபா கொடுப்பனவு போதுமானதா? இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர் மகளிர் பாதுகாப்புக்கு 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யும் அரசு எம்.பி.க்களுக்கு கார் கொள்வனவு செய்ய 118 கோடி ரூபா ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, மேலதிகமாக 75 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் சுகபோகத்திற்கு 200 கோடி ரூபா, ஆனால் சிறுவர் பாதுகாப்புக்கு அரைக்கோடி ரூபா இது என்ன நியாயம்?.
அத்துடன் நல்லாட்சி அரசு நிறுவுவதாக கூறிய விசேட நீதிமன்றம் எங்கே? இதுவரை விசேட நீதிமன்றம் நிறுவப்படவில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் தற்போது சிறுவர் பாதுகாப்பு மையம் 17 மாத்திரமே உள்ளன. சிறுவர் இல்லம் 33 உள்ளன. இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தோட்டப்புறத்தில் தாய்மார்கள் வேலைக்குச்சென்ற பின்னர் சிறுவர்களின் நிலைமையென்ன? அத்துடன் வெளிநாட்டிற்கு பணிக்குச் சென்றுள்ளவர்களின் குழந்தைகளின் நிலைமை என்ன? இதற்கு உரிய நடவடிக்கை அவசியமாகும்.
சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு புறமிருக்க தற்போது பெண் பொலிஸாருக்குக்கூட பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் உயர் அதிகாரிகளினால் இவ்வாறான அச்சுறுத்தலுக்கு பெண் பொலிஸார் முகங்கொடுத்துள்ளனர் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் பாடசாலை மாணவர்களின் போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த விசேட தெரிவு குழு அமைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.