சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது வீடு திரும்பலாம் என ஜோதிடர்கள் திகதி குறித்து வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் தொடர்பாக அவரது தோழி சசிகலா தீவிர ஆலோசனை செய்து வருகிறாராம். ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 5ஆம் திகதி வரை ஜாதகப்படி சரியில்லாமல் இருக்கிறது. எனவே, டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தாலும் டிசம்பர் 5ஆம் திகதிக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று ஜோதிடர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளார்களாம்.
டிசம்பர் 5ஆம் திகதிக்குப் பிறகு முதல்வரின் ஆரோக்கியத்துக்கு எதுவும் சிக்கல் இருக்காது. அவர்களின் ராசிப்படி அமோகமாக இருப்பார். டிசம்பர் 5ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிக்குள் டிஸ்சார்ஜ் வைத்துக் கொள்ளலாம். அது வளர்பிறையாகவும் இருக்கிறது என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 5ம் திகதி ஷஷ்டி திதி அன்றைய தினம் சுப முகூர்த்தம் என்றாலும் ஜெயலலிதா வெள்ளி, அல்லது சனி அதாவது டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10ம் திகதி தசமி அல்லது ஏகாதசி நாளில் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பின்னர் ஜெயலலிதா வீடு திரும்ப உள்ளதால் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் திகதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 65 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது ஜெயலலிதாவிற்கு நிற்க, நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கென பிரத்யேகமாக சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை நிபுணர் ஜெயலலிதாவிற்கு பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவது குறித்து முடிவெடுப்பது முதல்வர் கையில்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.