விடுதலைப் புலிகளின் பயிற்சி காணொளியை பார்வையிட்ட இளைஞர் கைது

கையடக்க தொலைபேசியில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பயிற்சி வழங்கும் காணொளியை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் கல்கமுவ பொலிஸ் தலைமையகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அம்பாறை பிரதேசத்தின் கடற்கரை சாலை, திருக்கோவில் விலாசத்தில் வசிக்கும் 35வயதுடையவர் எனவும், அவரது தொலைப்பேசிக்கு நபர் ஒருவரினால் வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தினால் இந்த காணொளி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அது என்ன என்று பார்த்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், கல்கமுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது ஒரு லட்சம் ரூபாயிலான இரண்டு சரீர பிணைகளில் அவரை விடுதலை செய்யுமாறும், இந்த வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் திருமணமாகாதவர் எனவும், கம்பஹா பிரதேசத்தில் திருமணம் செய்துள்ள பெண்ணுடன் காதல் தொடர்பு ஒன்று வைத்துள்ளதாகவும், அவரை பார்ப்பதற்கு சென்று திரும்பி வரும் போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த நபரின் தொலைப்பேசியில் இருந்த பல ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.