வற்வரி விதிப்பு உட்பட்ட வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் நாட்டில் விபசாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய ஆபத்து தோன்றியிருப்பதாக ஐ.ம.சு.மு.எம்.பி சிறியாணி விஜேவிக்கிரம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மகளிர் சிறுவர் விவகார அமைச்சின் செலவின தலைப்பிலான குழுநிலை விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்; 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டை பார்க்கிலும் 2017 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கு அதிகளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதன் மூலமாக நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் கணிப்பின் பிரகாரம் நாட்டில் 12000 முதல் 15000 வரையான விபசாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அரச சார்பற்ற அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் 4 இலட்சம் விபசாரிகள் இருப்பதாக தெரிய வருகிறது. இத்தகைய நிலையில் நாட்டில் அரசாங்கத்தினால் வற்வரி விதிக்கப்பட்ட வாழ்க்கை செலவினம் அதிகரிக்கப்பட்டுள்ள தருவாயில் 4 இலட்சமாக இருக்கும் விபசாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலை ஏற்பட்டால் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக காணப்படும் என்றார்.