பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்படும் போது கலகத்தடுப்பு பொலிஸார் மாணவர்களுக்கு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
சுமார் 3000 மாணவர்களை சுற்றிவளைத்து பொலிஸார் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக் கோரியும், இலவச கல்விக்கு முன்னுரிமை கொடுக்கக் கோரியுமே பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் ஏராளமான மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதியினூடான போக்குவரத்தில் ஈடுபட்ட பஸ்ஸூம் இந்த கண்ணீர்ப்புகை தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாகவும், இதனால் பஸ்ஸில் பயணித்தவர்களும் இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.
சுமார், 3000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர். இதை தடுக்கும் முகமாகவே பொலிஸார் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
மகிந்த ஆதரவு மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு கலந்து கொண்டிருந்ததாகவும் அரசாங்கத்திற்கு பல்வேறு வழிகளிலும் நெருக்கடி கொடுப்பதற்கான திட்டங்களில் இவ்வாறான போராட்டங்களும் ஒன்றென கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.