தேசிய வைத்தியசாலையில் நடந்த நான்கு மரணங்கள் – விசாரணை நடத்த குழு நியமிப்பு

தேசிய வைத்தியசாலையில் நடந்த இருதய சத்திர சிகிச்சையின் போது நான்கு நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சுகாதார அமைச்சு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் இருதய நோய் பிரிவினால், கடந்த 28ஆம் திகதி 6 நோயாளிகளுக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் பாலித மஹிபாலவின் வழி நடத்தலின் கீழ் மூன்று பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் லக்ஷ்மி சோமதுங்க, ஆய்வு கூட சேவைகள் பணிப்பாளர் கே.கே.பி. கமல் ஜயசிங்க, திடீர் தேடுதல் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரோஹ டி சில்வா ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என கூறிப்படுகின்றது.

மேலும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி இன்று(30) சுகாதார அமைச்சிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.