வடமாகாண சபைக்கான கட்டு நிதியில் மேலும் ஒரு தொகுதி நிதியாக 500 மில்லியன் ரூபா மத்திய திறைசேரி விடுவித்துள்ளதாக வட மாகாணத் திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரைக்கும் 34 வீதமான நிதிகளே மாகாணத் திறைசேரிக்கு கிடைத்த நிலையில் நேற்றைய தினம் மேலும் ஒரு 500 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நடப்பாண்டிற்கான நிதியில் சுமார் 45 வீத நிதிகள் மாகாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை மாகாணத்திற்கு ஒதுக்கிய நிதியில் 1 இல் 3 பங்கு நிதியே இதுவரை கிடைத்துள்ளமையினால் ஏனைய நிதிகளையும் விரைந்து வழங்க ஆவண செய்யுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் நேரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்போது ஜனாதிபதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அழைத்து நேரில் உரையாடி இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான நிதியும் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் மேலும் ஒரு தொகுதியான 500 மில்லியன் ரூபா பணம் வடக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.