18 வயதில் காதலுக்காக…வலியால் துடிதுடித்த அந்த தருணம்! வீறுநடை போடும் பெண்ணின் உண்மை கதை

உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் சாதிக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஒரு இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான கதையை அவரே சொல்கிறார் கேளுங்கள்.!

நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். தாய் தந்தையுடன் வசித்து வந்த எனக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவமனைக்கு செல்வது, மருந்துகள் சாப்பிடுவது என்றாலே பிடிக்காது. மிகவும் பயந்த சுபாவம் கொண்டவளாகவே நான் வளர்ந்தேன்.

நான் என் பெற்றோரிடம், எவ்வளவு வயதானாலும் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைக்கோ அல்லது அங்குள்ள ஆப்ரேஷன் தியேட்டருக்கோ செல்லவே மாட்டேன் என சிரித்து கொண்டு பல முறை கூறியுள்ளேன்.

ஆனால் என் வார்த்தைகள் என்னுடைய 18 வயது வரை மட்டுமே உண்மையாக இருந்தது.

எனக்கு 18 வயதாக இருந்த போது என் வாழ்க்கையே மாற போகிறது என அப்போது எனக்கு தெரியாது.

என் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு இளைஞன் தினம் பள்ளிக்கு செல்லும் போது என்னை பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினான்.

நான் அவன் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை, என் தந்தையை கொன்று விடுவேன் என்று கூட என்னை மிரட்டி பார்த்தான்.

ஆனால் எதையும் பொருட்படுத்தாத நான் என் படிப்பில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தேன்.

ஒருநாள் என் வீட்டு சமையலறையில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது ஜன்னல் அருகில் வந்த அந்த இளைஞன் கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து என் முகத்தில் ஊற்றிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டான்.

உலகத்தில் அப்படியொரு வலி இருக்குமா என எனக்கு தெரியவில்லை. ஆசிட் முகத்தில் பட்டவுடன் அப்படிப்பட்ட வலியால் அலறி துடித்து தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தேன்.

அருகில் இருந்த என் தந்தை ஆசிட் ஊற்றியவனை பிடிக்க ஓடினாரே தவிர என்னை மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்லவில்லை.

பிறகு வலியால் துடித்து கொண்டிருந்த என்னை சில மணி நேரம் கழித்தே மருத்துவமனையில் சேர்த்தார்கள். நேரம் அதிகமானதால் என் முகத்தை காப்பாற்ற முடியாது, முழுவதும் வெந்து விட்டது என்றார்கள் மருத்துவர்கள்.

மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டருக்கே போகக்கூடாது என சிறுவயதிலிருந்து வைராக்கியத்தோடு இருந்த எனக்கு 40க்கும் மேற்ப்பட்ட சர்ஜரி ஆப்ரேஷன் தியேட்டரில் செய்யப்பட்டது.

அந்த தருணத்தில் வாழ்க்கையே முடிந்து விட்டது போல இருந்தது எனக்கு. ஆனாலும் ஒரு தன்னம்பிக்கை என் மனதில் இருந்து எட்டி பார்த்தது.

சிகிச்சை முடிந்து வீடு வந்தவுடன் Make Love Not Scars என்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் சேர்ந்து நடத்தும் அமைப்பை தொடர்பு கொண்டேன்.

பிறகு என் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவர்கள் கொடுத்த தன்னம்பிக்கையால் என் பள்ளி படிப்பை வெற்றிகரமாக என்னால் முடிக்க முடிந்தது.

பிறகு கணினி வகுப்புகளில் சேர்ந்து பல விடயங்களை கற்றேன். பிறகு ஒரு மருத்துவமனையில் ரிஜிஸ்டிரேஷன் பிரிவில் வேலை செய்தேன்.

Make Love Not Scars அமைப்பில் தற்போது முக்கிய உறுப்பினராக இருக்கும் நான் என் போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

பயந்த சுபாவமாக வளர்ந்த நான், இன்று நான் இந்த சமுதாயத்தில் பல சோதனைகளை கடந்து தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட பெண்மணியாக வாழ்ந்து வருகிறேன் என கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன்.